TamilSaaga

சிங்கப்பூரின் ‘ராஜா’… உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழர் சின்னத்தம்பி ராஜரத்தினம்! சிங்கையில் பணிபுரியும் ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை!

சிங்கப்பூரை ஓர் சிறந்த கலாச்சார, பண்பாட்டு மற்றும் ஒருமித்த கலாச்சார ஒழுக்கமிக்க தேசமாக மாற்றிட திறம்பட பணியாற்றியவர் தான் மதிப்பிற்குரிய திரு. சின்னத்தம்பி ராஜரத்தினம்

இலங்கை யாழ்பாண பகுதியை சேர்ந்த சபாபதி சின்னத்தம்பி பிள்ளையின் மகனாக பிறந்தவர் தான் “ராஜா” என அழைக்கப்படும் சின்னத்தம்பி ராஜரத்தினம்.

இவரது தந்தை மலாய் ரப்பர் தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காக குடும்பத்துடன் மலாய்க்கு வந்தடைந்தார். முதல் குழந்தை மலாயில் பிறந்தது. விதி வசத்தால் அந்த குழந்தை சில நாட்களில் இறந்துவிட இரண்டாவது குழந்தை பிறப்பு சொந்த ஊரில் நிகழ வேண்டும் என்ற மனைவியின் விருப்பத்துக்கு இணங்கி சின்னத்தம்பி ராஜரத்தினம் பிறப்பு யாழ்பாணத்தில் நிகழ்ந்தது. தந்தையின் வேலை திறமையின் காரணமாக ரப்பர் தோட்டத்தில் வேலையாட்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பினை கவனித்து வந்தார்.

தனது இளமைக்கால கல்வியை St. Paul’s Institution, Victoria Institution மற்றும் சிங்கப்பூரின் Raffles Institution ஆகிய கல்வி நிறுவனங்களில் கற்றுத் தேர்ந்தார். பின்பு தனது சட்டப்படிப்பை முடிப்பதற்காக 1937ல் லண்டனில் உள்ள King’s College ல் சேர்ந்தார்.

சுமார் 12 ஆண்டுகள் லண்டனில் இருந்த அவருக்கு ஆங்கில ஆதிக்கத்தின் மீதான எதிர்மறை எண்ணங்கள் வலுவாக எழத்தொடங்கியது. அதன் விளைவாக மார்க்சிய சிந்தனையாளராக மாறத்துவங்கினார்.

பின்பு சிங்கப்பூருக்கு தனது மனைவியுடன் வந்து சேர்ந்தார். ஒரு சிறிய வீட்டில் இருந்தாலும் ஆங்கில ஆதிக்கத்தை களைய வேண்டும் என்ற வேட்கை மட்டும் பெரிய அளவில் இருந்தது அவருக்கு.

1948 முதல் 1950 வரை மலாயன் ட்ரிப்யூனலில் வேலை பார்த்தார். 1950க்கு பிறகு சிங்கப்பூர் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கையில் ஆசிரியராக பணியாற்ற துவங்கினார்.

தனது எழுத்துக்கள் மூலம் ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராக கணை தொடுத்தார். மார்க்சிய சிந்தனைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வழிவகுத்தார்.

மேலும் படிக்க – 700 வெள்ளி.. 1200 வெள்ளி.. 2600 வெள்ளி சம்பளம்.. சிங்கப்பூரில் நான்கே வருடத்தில் அசுர வளர்ச்சி காட்டிய தமிழக ஊழியர்! ‘உங்களால் தான் முடியும்’ என்று திறமையை கண்டு மெச்சிய நிறுவனம்!

அப்போது மலாயன் கருத்தரங்கம் நடத்திக்கொண்டு வந்த திரு.டேவிட் மார்ஷலின் மற்றும் சிங்கப்பூரில் வழக்கறிஞராக வேலை செய்து வந்த திரு.லீ குவான் யூ ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. இப்படி ஆகச்சிறந்த போராட்ட குணமும் சீரிய அறிவுக்கூர்மையும் கல்வியும் கொண்ட நண்பர்கள் இணைந்து ஒரு விடுதலை தீ எரியத் துவங்கியது.

இவர்களுடன் பின்னாளில் திரு.சமத் இஸ்மாயில் மற்றும் திரு.சி.வி. தேவன் நாயர் ஆகியோரும் சேர்ந்துகொள்ள 1954 ஆம் ஆண்டு உதித்தது மக்கள் செயல் கட்சி. கடும் போராட்டுத்துக்கு பிறகு 1959ல் அக்கட்சி தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்திட திரு.லீ குவான் யூ பிரதமராக பொறுப்பேற்றார்.

தனது அயராத உழைப்பினாலும் மக்களுக்கான கருத்துக்களாலும் அனைவரையும் கவர்ந்த திரு.ராஜரத்தினம் கலாச்சார அமைச்சராக பதவி வகித்தார். சிங்கப்பூரின் கலாச்சார ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்காக அரும்பணி ஆற்றினார். பிறகு 1959 ஆம் ஆண்டு கம்போங் கிளாம் என்ற தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். தனது அரசியல் வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் அதே தொகுதியில் நின்று ஜெயித்த பெருமையை கொண்டவர் திரு. சின்னத்தம்பி ராஜரத்தினம்.

1965ல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிப்பதற்காக அயராது பாடுப்பட்ட அவர் பிரிவினைக்கு பிறகு வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார். உலக நாடுகள் மத்தியில் சிங்கப்பூருக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்த பெருமை இவரையே சேரும். சிங்கப்பூர் ஐ.நா. சபை, காமன் வெல்த் நாடுகளில் இணைந்தது மற்றும் நிலவிய இனக்கலவரங்களை ஒடுக்கியது என அனைத்திலும் பெரும்பங்கு இவருக்கு உண்டு.

திரு.லீ குவான் யூ அவர்களின் நம்பிக்கை மிகுந்த நண்பராக பயணம் செய்து திரு. வீ கிம் வீ அவர்களை 4வது பிரதமராகவும் அமர வைத்தார். சிங்கப்பூரின் இன்றைய வளர்ச்சி வெற்றிகளுக்கு முதல் செங்கலாய் தன் வாழ்க்கையை அடித்தளமிட்ட சின்னத்தம்பி ராஜரத்தினம் அவர்களின் பெருமை என்றும் நினைவில் நீங்காமல் நிறைந்திருக்கும்.

Photo Courtesy of ISEAS Library, ISEAS-Yusof Ishak Institute, Singapore

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts