சிங்கப்பூரை பொறுத்தவரை உலகளாவிய அளவில் வெளிநாடுகளில் இருந்து பல திறமைகளுக்கு சிங்கப்பூரில் வாய்ப்பளிக்கப்பட்டாலும். வேலைகளுக்கான போட்டி குறித்த உள்ளூர் மக்களிடையே உள்ள கவலையைத் தீர்க்க சிங்கப்பூர் அரசாங்கம் வெளிநாட்டு தொழிலாளர் கொள்கைகளை மாற்றியமைக்கும் என்று நமது பிரதமர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தேசிய தின உரையில் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் பொருளாதாரத்திற்குத் தேவையான திறமையையும் நிபுணத்துவத்தையும் நாடு வரவேற்க வேண்டும் என்பதை சிங்கப்பூரர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்றும். அதே சமயம் “வெளிநாட்டு வேலை பாஸ்” வைத்திருப்பவர்கள் மீதான சிங்கப்பூரர்களின் கவலைகளை நாங்கள் நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
“வேலை பாஸ்” வைத்திருப்பவர்கள் நமது பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கும், அதிக வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவுகிறார்கள். அதே போல உலகெங்கிலும் உள்ள திறமைகளுடன் நமது சொந்த பணியாளர்களை நாம் பூர்த்தி செய்யும் பட்சத்தில், சிங்கப்பூரில் அதிகமான நிறுவனங்கள் முதலீடு செய்யும், அது சிங்கப்பூரர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரும். என்றார் பிரதமர்.
இருப்பினும், வேலை பாஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது, வேலைகளுக்கான போட்டி குறித்து மக்கள் இயல்பாகவே கவலைப்படுகிறார்கள், மேலும் இந்த பெருந்தொற்று சூழல் அந்த கவலையை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் வேலை என்பதை தாண்டி வேலை பாஸ் பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் நமது சமூக விதிமுறைகளுக்கு முழுமையாகத் தழுவிக்கொள்ள முடியாமல் போகிறது. சில சமயங்களில் சமூகத்தில் முழுமையாக அவர்களால் இணையமுடியாமல் போகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.