வெளிநாட்டில் வேலைக்காக அழைத்து செல்லப்படும் ஊழியர்கள் சிலரை கொடுமைப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. அதில் ஓமன் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட 16 ஊழியர்களை ஏஜென்ட் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஓமன் நாட்டு விமான நிலையத்தில் துப்புரவு பணிக்காக தமிழர்கள் 16 பேர் ஏஜென்ட் மூலம் சென்றனர். மாத சம்பளம் 60 ஆயிரம் எனக் கூறப்பட்டது. இதை நம்பி கடனை வாங்கி லட்சத்தில் காசு கட்டி ஓமன் நாட்டுக்கு சென்றவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அவர்களை கொத்தடிமைகளாக அறையில் அடைத்து சித்திரவதை செய்தனர். தொடர்ந்து ஏஜென்ட் சொல்லும் வேலையை செய்துக்கொண்டு கொடுப்பதை சம்பளமாக வாங்கிக் கொள்ள வேண்டும் என வற்புறுத்தி இருக்கிறார்கள்.
இதை தொடர்ந்து, தங்களை வேலைக்காக அழைத்து வந்து இங்கு அடைத்து வைத்து சித்திரவதை செய்வதாகவும், ஒரு வேளை மட்டுமே உணவு தருவதாகவும் தங்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து செல்லும்படி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
மேலும், 16 பேரின் குடும்பத்தினரும் தமிழ்நாட்டில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கையுடன் மனு கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் 16 தமிழர்கள் ஏஜென்ட்களால் தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த நியூஸ்7 என்ற செய்தி ஊடகம் அதுகுறித்து பிரத்யேக தகவலையும் வெளியிட்டுள்ளது. அதில் இத்தமிழர்களை விரைந்து மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.