வரலாற்றின் வழி நெடுக ஆங்காங்கே தமிழர்கள் அரேபியர், தெலுங்கர், மராட்டியர் ஐரோப்பியர் என பலருக்கும் அடிமைகளாக இருந்திருக்கின்றனர். ஆனாலும் ஐரோப்பியரின் வருகைக்கு பிறகுதான், குறிப்பாக ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரர்களும் தமிழ் பகுதிகளை காலனி நாடுகளாக மாற்றிய பிறகு தான் தமிழர்கள் தாயகத்தை விட்டு பல்வேறு நாடுகளுக்கும் அடிமைகளாக குடியேற்றப்பட்டனர். குடியேற்றப்பட்டனர் என்பதைவிட விற்கப்பட்டனர்,கடத்தப்பட்டனர் என்றும் சொல்லலாம். நம்மில் பலர் அந்த வலி நிறைந்த வரலாற்றுக் கொடுமைகளை அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவற்றையும் அறியவேண்டியது மிகவும் தேவை என்பதால் அது பற்றிய சில வரலாற்று சுவடுகளை இந்த வாரம் இந்தப் பக்கத்தில் பதிவு செய்வோம்.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் VTL சேவை : விற்றுத் தீர்ந்த விமான டிக்கெட்டுகள்?
கிபி 17 ம் நூற்றாண்டிலேயே ஐரோப்பியர்கள் வணிகத்தின் பெயரால் தமிழகத்தை அடிமைப்படுத்தி, தங்களின் காலனி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். வெளிப்படையாக இது வாணிகம் என்ற பெயரில் நடந்திருந்தாலும், மதம் பரப்புவதும், அரசியலும் இருபெரும் முக்கிய நோக்கங்களாக இருந்தன.
தமிழகத்தைப் போலவே ஆங்கிலேய பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியின் கீழ் பல்வேறு ஆசிய ஆப்பிரிக்க நாடுகளும், அங்கே புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தீவுகளும் கொண்டுவரப்பட்டன. விரிவடைந்த அவர்களின் எல்லை பகுதிகளும், அங்கிருந்த வளங்கள் உண்டாக்கிய பேராசையும், தங்கள் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த மக்களை கால் செருப்புகளை விட கேவலமாக நடத்தக்கூடிய துணிவையும் அவர்களுக்கு கொடுத்தன. அப்படித்தான் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிஜி, மாலத்தீவு, முதலான ஆசிய நாடுகளுக்கும், மொரிஷியஸ், மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, முதலான ஆப்பிரிக்க நாடுகளுக்கும், ஆஸ்திரேலிய பசிபிக் கடலில் இருந்த பல்வேறு தீவுகளுக்கும் தமிழர்கள் கொத்தடிமைகளாக குடியேற்றப்பட்டனர்.
இலங்கையில் ஆங்கிலேயர்கள் புதிதாக உற்பத்தி செய்த தேயிலையும், காபியும் தாராளமாக விளைந்தன. மலேசியாவில் ரப்பர் தோட்டங்கள் பயிரிடப்பட்டன. மொரிசியசு, மடகாஸ்கர் முதலான இடங்களில் கரும்புத் தோட்டங்கள் போடப்பட்டன. தென்னாப்பிரிக்காவிலோ தங்கச்சுரங்கம் வெட்டப்பட்டது. இந்த இடங்களிலெல்லாம் உடலுழைப்புக்கு அவர்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டனர்.
சீனர்களை வேலைக்கு அமர்த்தி பார்த்தனர் . ஆனால் சீனர்கள் போதிய அளவு, அவர்கள் எதிர்பார்த்தது போல வேலை செய்யவில்லை. எதிர் கேள்விகள் கேட்கத் தொடங்கினர். ஊதிய உயர்வுக்காக போராடினர். அடுத்து ஆப்பிரிக்க நீக்ரோக்களை வேலைக்கு அமர்த்திப் பார்த்தனர். அவர்களோ ஆண்டுதோறும் 6 மாத விடுமுறை கேட்டனர் முடிவில் தமிழகம், புதுவை பகுதிகளில் இருந்து கூலிகளாக, அடிமைகளாக, தமிழர்களை கொண்டு வர முடிவு செய்தனர்.
சென்னை, புதுச்சேரி, காரைக்கால் , நாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களில் இருந்து கப்பல் கப்பலாக தமிழ் அடிமைகள் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர். கடற்கரை நகரங்களில் பெற்றோர் தமது குழந்தைகளை தலைக்கு நான்கு பணம் பெற்றுக் கொண்டு விற்றனர். 1630 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தம் குழந்தைகளை உணவுப் பொருளுக்கு ஈடாக கூட விற்றனர். பஞ்சகாலத்தில் மற்ற பொருள்களின் ஏற்றுமதி குறைந்து போனது. எனவே ஐரோப்பியர்கள் தமிழ் மக்களை அடிமைகளாக்கி,அந்த அடிமைகளை விற்பதை ஒரு வியாபாரமாக்கி, அதிலேயே பெரும் லாபமும் கண்டனர். டச்சுக்காரர்கள் மட்டும் ஆங்கிலேயருக்கு குறைந்தவற்களா என்ன? அவர்களும் திருச்சி, தஞ்சாவூர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை அடிமைகளாக விலைக்கு வாங்கி, இலங்கையிலும் ஜாவாவிலும் விற்றனர்.
சென்னை மாநிலத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேர் இவ்வாறு விற்கப்பட்டு இருக்கின்றனர். ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர், போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர், ஆகிய ஒவ்வொருவரும் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளிலிருந்து, அடிமைகளை வாங்குவதையும், கப்பல் ஏற்றுவதையும் , விற்பதையும் தங்கள் முக்கியத் தொழிலாகவே கொண்டிருந்தனர். இந்த அடிமை வணிகம் பற்றி அப்துல் ரசாக், நிக்கோலா காண்டி, பார்போசா, மற்றும் வெள்ளைக்கார கிறிஸ்தவத் துறவிகள் தங்கள் குறிப்புகளில் மிகத் தெளிவாகவே பதிவு செய்திருக்கின்றனர்.
அடிமைகளாக விற்கப்படுகிற கொடுமை போதாது என, அவர்களை ‘கூலி கப்பல்’ என்று அழைக்கப்பட்ட (coolie ship) அந்த கப்பல்களில் ஏற்றி அனுப்பி வைத்ததும், அந்த கப்பல்களில் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளும் சொல்லில் வடிக்க முடியாதவை. கூலி கப்பல்களில் பயணிக்கும்போது மாலுமி முதலான கப்பல் அலுவலர்கள், அந்த அடிமைகளுக்கு எவ்வளவு துன்பம் கொடுக்க முடியுமோ அவ்வளவு துன்பம் கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இந்த ஒரு உதாரணம் போதும் எந்த அளவிற்கு தமிழர்கள் அந்த கப்பல் பயணங்களின் போது சித்திரவதை அனுபவித்தார்கள் என்று அறிந்துகொள்ள
1864 இல் மொரிசியசு சென்ற கப்பலில் இருந்த ஒரு மருத்துவர், பயணிகளை அடித்தும் உதைத்தும் துன்புறுத்தி இருக்கிறார். அதன் உச்சகட்டமாக ஒரு பயணியின் இரண்டு கட்டை விரல்களை மட்டும் கயிற்றால் கட்டி அவரை 8 மணி நேரம் தொங்க விட்டிருக்கிறார் .அதன் பிறகும் அவர் இறக்கவில்லை என கண்டு,ஆத்திரத்தில் அவரை இறக்கி அடித்த அடியில் அவர் இறந்தே போனார் என வரலாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கொடுமைகள் போதாதென்று கப்பல்களில் எவ்வளவு இடம் இருக்கிறதோ அதற்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் செல்வது வழக்கமாக இருந்தது. இந்த கப்பல் பயணங்கள் குறித்து திரு மாரிமுத்து மணி அவர்கள் தனது இந்திய தமிழர் குடிப்பெயர்வு நூலில் மிகத் துல்லியமாக பல்வேறு நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறார்.
புதுச்சேரி வழியாக 1842 – 1870 ஆண்டுகாலத்தில் மட்டும் 5,33,595 தமிழ் கூலிகள் பிரெஞ்சுக் காலனிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
1828 ஆம் ஆண்டு முதல் தமிழர்கள், இலங்கையில் வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய காபி தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய அனுப்பிவைக்கப்பட்டனர்.
1877- 1878 ஆம் ஆண்டில் மட்டும், 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் இலங்கைக்கு கூலிகளாக கொண்டு செல்லப்பட்டனர்.
1833 ஆம் ஆண்டில் இருந்து,மலேயா,சிங்கப்பூருக்கு நாகப்பட்டினம் துறைமுகம் வழியாக கூலிகள் கொண்டு செல்லப்பட்டனர்.
நோய் , விபத்து , தாங்கமுடியாத அளவு இரவு, பகல் வேலை , வீட்டு நினைவு , பசி , பட்டினி , என பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளான தமிழர்கள் அவ்வளவு எளிதாக தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பிவிட முடிந்ததும் இல்லை. சரி இத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொள்ள துணிந்தும், கூலிகளாக கடத்திச் செல்லப்பட்டதற்கும் காரணங்கள் என்ன என்று நோக்கும்பொழுது பத்து வகையான காரணங்கள் வரிசை படுத்தப்படுகின்றன.
வறுமை
வறட்சி
இயற்கையின் சீற்றங்கள்
தொற்றுநோய்
அந்நியர் படையெடுப்பு
இன வேறுபாடு
சாதிக்கொடுமை
வேலைவாய்ப்பின்மை
சமூக புறக்கணிப்பு
தீராத நோய்
இந்த காரணங்களில் பல இன்னும் மாறாமல், இன்றைக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை உருவாக்கும் முக்கிய காரணிகளாக இருப்பது உண்மையிலேயே வேதனைக்குரிய ஒன்று தான்.
சரி! அப்படி இவர்கள் சென்ற இடத்தின் சூழலும், இவர்களுக்கு வழங்கப்பட்ட வேலைகளும், வேலை நேரமும் எப்படி இருந்தன? தெரிந்து கொள்வோம் அடுத்த வாரம்….
தேடலுடன்
உங்கள்
ஆரா அருணா