TAMILNADU: தமிழகத்தில் உள்ள சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சத்தியப்பிரியா என்ற கல்லூரி மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற நபர் காதலிக்க வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில், நேற்று (அக்.13) மதியம் 1 மணியளவில் செயின்ட் தாமஸ் மவுண்ட் எனும் பரங்கிமலை ரயில் நிலையத்தில், ஓடும் ரயில் முன்பு அந்த மாணவியை தள்ளிவிட்டு சதீஷ் கொலை செய்திருக்கிறார்.
இதில் சம்பவ இடத்திலேயே மாணவி சத்தியப்பிரியா உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக பரங்கிமலை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சதீஷை தேட 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
பரங்கிமலை ரயில் நிலைய பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, சதீஷ் ஆட்டோவில் தப்பிச் சென்றது தெரியவந்தது. கொலை செய்த பிறகு தனது மொபைலை சதீஷ் ஆஃப் செய்துவிட்டார். பிறகு, கிழக்கு கடற்கரை சாலையில் சதீஷ் மொபைலை ஆன் செய்த போது, போலீசார் அவரது இருப்பிடத்தை கண்டறிந்து நள்ளிரவில் வைத்து கைது செய்தனர்.
இந்த நிலையில், மகளின் கொலை செய்திகேட்ட தந்தை மாணிக்கத்திற்கு அதிர்ச்சியை தாங்க முடியாமல் நெஞ்சுவலி ஏற்பட, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார். மகள் சத்யாவின் உடல் வைக்கப்பட்டிருக்கும் அதே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், தந்தை மாணிக்கத்தின் உடலும் வைக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் பெற்ற மகள், கணவன் என இருவரையும் இழந்து நிர்கதியாய் நிற்கிறார் சத்யாவின் தாய். இந்நிலையில், சத்யா கொலை தொடர்பான செய்திகளில் பலரும், இது போன்ற குற்றத்திற்கு சிங்கப்பூர், அரபு நாடுகளில் கடுமையான தண்டனைகள் கொடுப்பது போல் சட்டம் இயற்ற வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
சிங்கப்பூரில் இதுபோன்ற மோசமான குற்றங்களுக்கு மிக விரைவில் விசாரணை முடிக்கப்பட்டு, அதிகபட்சம் 1 வருடத்திற்குள் மரண தண்டனை விதிக்கப்படும். அதுமட்டுமின்றி, சிங்கப்பூர் பிரம்படி பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். அதைவிட ஒரு கொடுமை இருக்க முடியாது. அவர்கள் அடிக்கும் அடியில் பின்பக்க சதை கிழிந்துவிடும். 10 அடி அடித்தால், ஆயுள் முழுவதும் அந்த தழும்பு மறையாது. உட்காரவும் முடியாது.
இந்த சம்பவம் குறித்து உங்கள் கருத்து என்ன?