சிங்கப்பூர், மார்ச் 08, 2025: சிங்கப்பூரின் 60-வது சுதந்திர ஆண்டு (எஸ்ஜி60) கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஃபேர்பிரைஸ் குழுமம் தனது சொந்த தயாரிப்புகளுக்கு விலைக் தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. மார்ச் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, மக்கள் விரும்பும் பொருள்களை குறைந்த விலையில் வழங்கும் திட்டத்தை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மார்ச் 6 முதல் மே 28, 2025 வரை 12 வாரங்களுக்கு, வாரந்தோறும் ஐந்து பொருள்களுக்கு விலைத் தள்ளுபடி வழங்கப்படும். மொத்தம் 60 பொருள்கள் இதில் அடங்கும். உணவு, பானங்கள், சிற்றுண்டிகள், சமையல் மற்றும் கழிவறை அத்தியாவசியப் பொருள்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த வாரம், ஃபேர்பிரைஸ் முத்திரையிடப்பட்ட கெனோலா சமையல் எண்ணெய், தாய்லாந்து வெள்ளை அரிசி, வறுத்த கோழி இறக்கைகள், டோர்டில்லா வறுவல் ஆகியவற்றுக்கு 36% வரை விலைக் கழிவு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விப்புல் சாவ்லா கூறுகையில், “எங்கள் பொருள்களின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், சிறந்த பொருள்களை மேலும் பலருக்கு கொண்டு சேர்க்க விரும்புகிறோம். எஸ்ஜி60 கொண்டாட்டங்களில் அனைவரும் பங்கேற்க, அத்தியாவசியப் பொருள்களை பெறுவதை உறுதி செய்ய இது உதவும்,” என்றார்.
தற்போது, ஃபேர்பிரைஸ் முத்திரையிடப்பட்ட 3,500-க்கும் மேற்பட்ட பொருள்கள் 10 முதல் 15% விலைக் கழிவுடன் விற்பனையில் உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.fairpricegroup.com.sg/sg60/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.