எதிர்வரும் 2025ம் ஆண்டில் எட்டவேண்டிய இலக்கை மூன்று ஆண்டுகள் முன்னதாக சாதித்து காட்டியுள்ளது நமது சிங்கப்பூர். அதாவது சிங்கை முழுவதும் 95 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் முழுமையான 5G நெட்ஒர்க் கவரேஜை எட்டியுள்ளதாக சிங்டெல் (Singtel) நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 22) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Singtel நிறுவனத்தின் 5G நெட்வொர்க் இப்போது சிங்கப்பூர் முழுவதும் 1,300க்கும் மேற்பட்ட வெளிப்புற இடங்களை உள்ளடக்கியது மற்றும் சுமார் 400 கட்டிடங்கள் மற்றும் நிலத்தடி (Subways) இடங்களுக்கு சிக்னல் வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமல்லாமல் உலக அளவில் தனித்து இயங்கும் 5G கட்டமைப்பை முழுமையாக செயல்படும் உலகின் முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது நமது சிங்கப்பூர்.
5G என்ற இந்த 5th generation அதிவேக மொபைல் நெட்ஒர்க், 4G நெட்வொர்க்குகள் வழங்குவதை விட 20 மடங்கு வேகமான சர்ஃபிங் வேகத்தை உறுதியளிக்கிறது. சிங்கப்பூரில் 5G நெட்வொர்க்குகளை இயக்க சிங்டெல், StarHub மற்றும் M1 ஆகியவற்றின் கூட்டு முயற்சிக்கு கடந்த ஜூன் 2020ல் அனுமதி அளிக்கப்பட்டது.
“பெருந்தொற்று மூலம் ஏற்பட்ட இடையூறுகள், மனிதவள பிரச்சனை மற்றும் பிற வளங்களின் மீது ஏற்பட்ட தாக்கம் இருந்தபோதிலும், எங்கள் ஊழியர்களும், பொறியாளர்களும் எங்கள் 5G Network பணிகளை தொடர்ந்து செயல்படுத்த முடிந்தது”.
“இந்த மாபெரும் 5G நெட்வொர்க்கிற்கான அடித்தளத்தை அமைப்பதற்கும், ஒரு புதிய உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் உழைத்தோம், அதில் இன்று வெற்றியும் கண்டுள்ளோம்,” என்று சிங்டெல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு யுவன் குவான் மூன் கூறினார்.