TamilSaaga

சீன ஜோதிடத்தில் நீங்கள் பிறந்த ஆண்டிற்கான விலங்கு எது? என்ன பலன்?

Lunar Newyear என்று அழைக்கப்படும் சீன புத்தாண்டு, பிப்ரவரி 10 அன்று டிராகன் ஆண்டாக பிறக்க உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தியே. வழக்கமாக நாம் பின்பற்றும் ஜோதிடத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளை வகைப்படுத்தி இருப்பதைப் போன்று, சீன மக்களும் அவர்களின் மரபு வழக்கப்படி பிறக்கும் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு விலங்கு என்று 12 ராசி விலங்குகளை வகைப்படுத்தி அதற்கான பலன்கள் எப்படி இருக்கும் என்று கணித்துள்ளனர். ஒவ்வொரு 12 ஆண்டிற்கும் சுழற்சி முறையில் இதனை பின்பற்றுகின்றனர்.

இது 2000 ஆண்டுகளுக்கு மேலாக சீனர்கள் பின்பற்றும் வழக்கமாகவும் நம்பிக்கையாகவும் உள்ளது.மேலும் இதன் புராண வரலாற்று கதையை அறிந்து கொள்வது சுவாரசியமானது. சிறுவர் முதல் பெரியவர் வரை கதை என்றால் மூளை உற்சாகம் அடைவது இயல்பானது. வாருங்கள் அதனைத் தெரிந்து கொள்வோம்.

ஒருமுறை சீனர்களின் புராண கடவுளான Jade Emperor காலத்தை கணக்கிட விரும்பி விலங்குகளுக்கான ஓர் ஆற்றைக் கடக்கும் போட்டி நடத்தியதாகவும் போட்டியில் முதலில் வந்த 12 விலங்குகளுக்கு 12 ஆண்டுகளுக்கான பெயரை வரிசையாக சூட்டியதாகவும் அந்த சீன புராண கதை துவங்குகிறது.

அவ்வாறு நடந்த போட்டியில் பங்கேற்ற பல விலங்குகளில் எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய் மற்றும் பன்றி போன்ற விலங்குகள் முறையே வரிசையாக முதல் 12 இடங்களைப் பிடித்து 12 ஆண்டுகளின் பெயரைக் கொண்டு வழங்கப்படுகின்றன.

அது சரி! ஆற்று நீரில் நன்கு நீந்த கூடிய பல விலங்குகள் இருக்க எலி எவ்வாறு முதலில் வந்து இருக்கும் என்பதை தெரிந்து கொள்வது படு நகைச்சுவையானது. Jade Emperor குறித்த போட்டி நாளன்று போட்டியில் கலந்து கொள்ள அனைத்து விலங்குகளும் ஆற்றின் ஒருபுறம் வரிசையாக நின்றன. அப்போது போட்டியில் பங்கேற்ற எலியும் பூனையும் எருதிடம் சென்று, தங்களுக்கு அவ்வளவாக நீந்த வராது என்றும் தங்களை அதனுடைய முதுகில் ஏற்றிக் கொண்டு செல்லுமாறும் உதவி கேட்டனவாம். இளகிய மனமுடைய அந்த எருதும் ஒப்புக்கொண்டு அவை இரண்டையும் முதுகில் சுமந்தவாறு ஆற்றைக் கடக்கத் துவங்கியதாம்.

ஆற்றின் மறுமுனையை அடையப் போகும் நேரத்தில், தந்திரமான எலியானது பூனையை ஆற்றுத் தண்ணீரில் தள்ளி விட்டுவிட்டு, எருதின் முதுகில் இருந்து ஆற்றின் மறுபுறம் தாவி குதித்து போட்டியில் முதல் இடத்தத்தைப் பிடித்துக் கொண்டதாம். பாவப்பட்ட எருதோ இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்ததாம். அடுத்து சிரமப்பட்டு நீந்திய புலி மூன்றாம் இடத்தையும், கற்பாறைகள் மீது தாவியும் மரக்கட்டைகளில் மிதந்தும் வந்த முயலானது நான்காவதாகவும் வந்தனவாம்.

வழியில் மற்றவருக்கு உதவி செய்த காரணத்தினால் ஐந்தாவதாகவே டிராகன் வர முடிந்ததாம் . ஆறாவதாக குதிரை வரப் போகிறது என்று நினைத்த போது, எதிர்பாராமல் அதன் காலில் சுற்றிக் கொண்டு வந்த பாம்பானது ஆற்றின் மறுபுறம் வழுக்கிக் கொண்டு விழுந்து ஆறாவது இடத்தை தட்டிச் சென்றதாம். குதிரைக்கு ஏழாம் இடமே கிடைத்ததாம்.

அடுத்ததாக நன்கு கட்டப்பட்ட மரத்தெப்பத்தில் ஆற்றைக் கடந்து வந்த ஆடு,குரங்கு, சேவல் மூன்றும் முறையே எட்டு, ஒன்பது, பத்தாவது இடங்களைப் பெற்றனவாம்.

நன்கு நீந்தக் கூடிய நாயோ, ஆற்று தண்ணீரில் நீண்ட நேரம் குளிக்க விரும்பி சற்று தாமதமாகவே கரைக்கு வந்த காரணத்தினால் பதினோராம் விலங்காக வந்ததாம்.

கடைசி இடமான பனிரெண்டாம் இடத்திற்கு வழியில் உண்டு, உறங்கி விட்டு வெகு தாமதமாகவே பன்றி வந்து சேர்ந்ததாம்.

இவ்வாறு 12 ஆண்டுகளுக்கு 12 விலங்குகளின் பெயரை Jade Emperor சூட்டி முடித்ததும் , போட்டியெல்லாம் முடிந்து முதலில் எலியால் தள்ளி விடப்பட்டு தண்ணீரில் விழுந்த பூனை நடுங்கிய படி கடைசியாகவே கரை சேர்ந்ததாம்.

அன்று முதல் எலி மீது கோபம் கொண்ட பூனை, இன்றுவரை எலியை தன் எதிரியாக கருதி துரத்துவதோடு தண்ணீரைக் கண்டும் அஞ்சுகிறதாம். இவ்வாறு அந்த புராண கதை முடிவடைகிறது.

Lunar New year

Lunar New year என்பது ஜனவரி 21 முதல் பிப்ரவரி 20 வரையிலான நாட்களில் வரும் முதல் அமாவாசை அன்று பிறக்கிறது.

சீனமக்கள் ஒவ்வொரு Lunar புத்தாண்டிற்கும் ஒரு விலங்கிற்கான  தனித்துவ பண்பு உள்ளதாக நம்புகின்றனர். மேலும் அதனைப் பொறுத்து பிறக்கும் ஆண்டின் நிகழ்வுகளை கணிக்கவும் புரிந்துகொள்ளவும் செய்கின்றனர். இது முக்கியமாக ஒரு நபரின் பிறந்த ஆண்டோடு Lunar ஆண்டு ஒத்துப்போகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது.

ஒவ்வொரு சந்திர Lunar புத்தாண்டு விலங்குகளின் பண்புகள் என்ன?

Rat ( 1984, 1996, 2008 மற்றும் 2020)

எலி வருடத்தில் பிறந்தவர்கள் உத்வேகம் உணர்திறன் மற்றும் படைப்பாற்றல் கொண்டவர்கள். எலிகள் மற்றவர்களின் பாராட்டுகளைத் தேடாமல் சேகரிப்பதிலும் சேமிப்பதிலும் சிறந்தவை. அதை போன்ற குணம் படைத்தவர்கள். எவ்வாறாயினும், அவர்கள் சூழ்நிலைகள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களை எளிதாக நன்கு கணிக்கக் கூடியவர்களாக அறியப்படுகிறார்கள்.

Ox (1985, 1997, 2009, 2021)

எருது வருடங்களில் பிறந்தவர்கள் பொதுவாக பொறுமையானவர்கள், மற்றவருக்கு நல்ல நண்பர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள். ஆனால் அவர்கள் பிடிவாதமாகவும் எளிதில் வளைந்துகொடுக்காதவர்களாகவும் இருப்பார்கள்.

Tiger (1986, 1998, 2010, 2022)

புலி ஆண்டு உங்கள் பிறந்த வருடமா? இவர்கள் பெரும்பாலும் எளிதில் உணர்ச்சிவயப்படுபவர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களில் மிகவும் ஆர்வம் காட்டுபவர்கள். துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் சில சமயங்களில் கலகக்காரர்களாகக் காணப்படுவார்கள் என்பதே இதன் பொருள்.அவர்கள் சிலசமயம் பொறுப்பற்றவர்களாகவும் இருக்கலாம், ஆனால் எப்போதும் ஒரு தடைக்குப் பிறகு எழுந்து வெற்றி பெறுவார்கள்.

Rabbit (1987, 1999, 2011, 2023)

இவர்கள் கனிவான இதயம், கண்ணியம், மற்றும் அதிக பொறுப்புணர்வு கொண்டவர்கள். எந்த ஒரு வேலையையும் முக்கியமாக கருதுபவர்கள். அவர்கள் சுய ஒழுக்கம் உடையவர்கள். உறுதியானவர்கள். சீன புராணத்தின் படி, சந்திரன் தெய்வமான சாங்கே தனது செல்லப் பிராணியாக ஒரு முயலைக் கொண்டுள்ளது.

Dragon (1988, 2000, 2012, 2024)

சீன கலாச்சாரத்தில் ஒரு புராண உயிரினமான டிராகன், மிகவும் அதிர்ஷ்டசாலி மற்றும் சக்திவாய்ந்த சீன ராசி விலங்காக பார்க்கப்படுகிறது. இவர்கள் லட்சிய கனவு காண்பவர்கள் மற்றும் தங்கள் வாழ்நாள் முழுவதும் சாகசத்தை நாடுகின்றனர். இருப்பினும், இவர்கள் எளிதில் கோபப்படுபவர்கள்.

Snake (1989, 2001, 2013, 2025)

சீன கலாச்சாரத்தில், பாம்புகள் சிறிய டிராகன்களாகக் கருதப்படுகின்றன. எனவே இவர்களும் டிராகன் குணத்தை கொண்டுள்ளனர் மேலும் இவர்கள் இலட்சியவாதிகள் மற்றும் இதயத்தில் எப்போதும் ஆர்வமிக்கவர்கள். இவர்கள் மிகவும் உறுதியானவர்கள் மற்றும் எல்லாவற்றையும் சரியாக புரிந்து கொள்ள முற்படுகிறார்கள்.

Horse (1990, 2002, 2014, 2026)

குதிரை வருடத்தில் பிறந்தவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் மற்றும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். அவர்களைச் சுற்றி இயல்பான நட்பு வட்டம் உருவாக்குவார்கள். ஆனால் சில சமயங்களில் இவர்களால் ரகசியங்களை காப்பாற்ற இயலாது. இவர்கள் ஒருபோதும் சரணடைய மாட்டார்கள் மற்றும் எப்போதும் தங்களை வெளிப்படுத்தவே விரும்புவார்கள்.

Goat (1991, 2003, 2015, 2027)

ஆட்டைப் போலவே, இந்த மக்கள் மென்மையான மற்றும் அழகானவர்கள். மற்றவர்கள் கூறுவது பிடிக்காது இருப்பினும் தங்கள் கருத்தை வெளிப்படுத்த தயங்குவார்கள்.மேலும் பொறுமையாகவும் அன்பாகவும் இருப்பார்கள், மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பார்கள்.

Monkey (1992, 2004, 2016, 2028)

இவர்களுக்கு ஒரு வேலை பிடிக்காவிடில் அதனை முடிக்க சோம்பல் கொள்வார்கள். அதுவே பிடித்த வேலையெனில் மற்றவர்கள் ஆச்சர்யப்படும் விதத்தில் விரைவில் முடிப்பார்கள். மிகவும் புத்திசாலிகளாகக் காணப்படுவார்கள். இவர்கள் வாழ்க்கையில் ஆர்வம் கொண்டவர்கள், மற்றவர்கள் மீது அக்கறை கொண்டவர்கள், முடிவில்லாத ஆர்வம் கொண்டவர்கள்.

Rooster (1981, 1993, 2005, 2017, 2029)

இவர்கள் சிறந்த திட்டமிடுபவர்கள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி எப்போதும் துல்லியமாக சிந்திப்பவர்கள். மற்றவர்கள் நினைப்பதை எளிதில் கண்டுபிடிப்பவர்களாக இருப்பார்கள். இது அவர்களை சிறந்த நண்பர்களாகவும் தந்திரமான எதிரிகளாகவும் ஆக்குகிறது. சிறந்த படைப்பாளிகள் ஆவர்.

Dog (1982, 1994, 2006, 2018, 2030)

இவர்கள் விசுவாசமானவர்கள் மற்றும் வலுவான நீதி உணர்வைக் கொண்டவர்கள். மேலும் கடினமாக உழைக்க கூடியவர்கள் மற்றும் அதனால் மதிக்கப்படுவார்கள். இவர்கள் எச்சரிக்கையாக இருப்பதால் இவர்களின் நம்பிக்கையை பெற்று நல்ல நண்பர்களாக மாற சிறிது நேரம் ஆகலாம். இருப்பினும், இவர்கள் உறவுகளில் மகிழ்ச்சியை உணர்ந்தவுடன், அவர்களிடம் நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பார்கள்.

Pig (1995, 2007, 2019, 2031)

இவர்கள் நன்கு சிந்திக்க கூடியவர்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பவர்கள். எளிதில் கோபப்படுபவர்கள். ஆனால் அன்பானவர்கள். மற்றவர்களுடன் நன்கு பழகுவதால் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.

சீன ஜோதிட வழக்கப்படி நீங்கள் பிறந்த ஆண்டிற்கான விலங்கையும், குணநலன்களையும் அறிந்து கொண்டீர்களா? பல்வேறு நாடுகளில் பல்வேறு முறைகளில் கணிக்கப்பட்டு பின்பற்றப்படும் ஜோதிடமானது அங்கு வாழும் மக்களின் கலாச்சாரம், சமூக வாழ்க்கை, மற்றும் நம்பிக்கைகளோடு தொடர்புடையது. இதன் சாதகங்களை வாழ்விற்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பாதகங்களை கடந்து செல்வது பொதுவாக நன்மை அளிக்கும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்ள தமிழ் சாகா ஃபேஸ்புக் பக்கத்தை நீங்க ஃபாலோ பண்ணலாம்.

Related posts