நான்கு வருடங்களில், 126 கிலோ எடையை உடற்பயிற்சி மற்றும் கீட்டோஜெனிக் உணவு முறையை பயன்படுத்தி குறைத்த சிங்கப்பூர் சாதனையாளர். 37 வயது நிரம்பிய எனும் கிராப் ஃபுட் டெலிவரி ரைடர், நான்கு வருடங்களாக இருசக்கர வாகனத்தில் அதாவது சைக்கிளில் சென்று உணவு விநியோகம் செய்து, தனது உடல் எடையை 200 கிலோவிலிருந்து 76 கிலோவாக குறைத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், வாரம் ஐந்து நாட்கள், ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை, தான் சைக்கிளில் சென்று உணவு விநியோகம் செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கீட்டோஜெனிக் உணவு முறையைப் பின்பற்றியதால் சைக்கிளிங் செய்வதற்கு தனக்கு தேவைப்பட்ட அதிகப்படியான ஆற்றல் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கீட்டோஜெனிக் உணவு என்பது குறைந்த கார்ப் (5-10%), மிதமான புரதம் (20%), அதிக கொழுப்பு உணவு (75%) ஆகியவை சேர்ந்த ஒரு உணவு முறையாகும். இந்த உணவு முறையில், நீங்கள் அதிகமான கொழுப்பை உட்கொள்ளும்போது, கார்போஹைட்ரேட்ஸ்-க்கு பதிலாக கொழுப்புச்சத்து எரிக்கப்படுகிறது, அதனால் உங்கள் எடை அளவும் கணிசமாக குறைகிறது. அடிப்படை ஆராய்ச்சியின் போது, இந்த உணவு முறையானது, உடல் கொழுப்பைக் குறைப்பதில் 2.2-3 மடங்கு வேகமாக செயல்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், சிலரின் வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் விருப்பங்களுக்கு இந்த உணவுமுறை ஏற்றதாக இருக்காது. கீட்டோ உணவுத் திட்டம் உடலுக்கு சரியாக இருக்குமா, இல்லையா என்பதை தீர்மானிக்க, முதலில் உங்கள் உணவுத் திட்டம், பழக்கவழக்கங்கள் மற்றும் இலக்குகளைப் பற்றி முதலில் மருத்துவரிடம் பேச வேண்டும். மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பிறகே இந்த உணவு முறையை பின்பற்ற வேண்டும். இந்த உணவுமுறை மூலம் PCOS, இரத்த சர்க்கரை, தைராய்டு, கால்-கை வலிப்பு மற்றும் அல்சைமர் போன்ற பல்வேறு பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது.
எனினும், கீட்டோ டயட்டில் சில பக்கவிளைவுகள் உள்ளன, நீங்கள் நீண்ட காலத்திற்கு உணவில் இருக்க திட்டமிட்டால் உங்கள் மருத்துவரிடம் முதலில் பேச வேண்டும். கீட்டோ உணவிற்கான சிறந்த உதாரணங்களாக இறைச்சி துண்டுகள், சீஸ், ஆலிவ்கள், வேகவைத்த முட்டைகள், கொட்டைகள், பச்சை காய்கறிகள் மற்றும் டார்க் சாக்லேட் ஆகியவை கூறப்படுகின்றன. வெளியே சாப்பிடும் போதும், இறைச்சி, மீன் அல்லது முட்டை சார்ந்த உணவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும், கார்போஹைட்ரேட்டுகள் அல்லது மாவுச்சத்துக்களுக்குப் பதிலாக கூடுதல் காய்கறிகளை ஆர்டர் செய்து, இனிப்புக்கு சீஸ் சாப்பிடலாம்.
கீட்டோஜெனிக் வாழ்க்கை முறையைப் பின்பற்றும்போது, உடல் ஆற்றலுக்காக, நாம் உட்கொள்ளும் கொழுப்புச்சத்தை, கல்லீரல் கீட்டோன்களாக மாற்றுகிறது. மூளைக்கு தொடர்ந்து ஆற்றலை வழங்குவதை உறுதி செய்கிறது!ஆரம்பத்தில், உடலின் ஆற்றல் மட்டம் உயர்கிறது, நாளடைவில், உடல் குளுக்கோஸுக்குப் பதிலாக கொழுப்பை எரிக்க தொடங்குகிறது. இதனால் சில சோர்வான தருணங்களை சந்திக்க நேரிடலாம், ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு, நல்ல மாற்றத்தை உணர முடியும் என்று பலர் கூறுகின்றனர்.
இந்த உணவு முறையை பின்பற்றும் பலர் தங்கள் அனுபவங்களைப் பகிரும் போது, தாங்கள் இந்த உணவு முறையை கடந்த 9 மாதங்களாக பின்பற்றி வருவதாகவும், முதல் மூன்று மாதங்களிலேயே தங்களுடைய எடை 78 கிலோவிலிருந்து 60 கிலோவாக குறைந்தது என்றும், ரத்த அழுத்தமும் சீராகிறது என்றும் கூறுகின்றனர். மேலும் ஒரு கீட்டோ உணவு முறை பிரியர், தான் கடந்த 6 மாதங்களில், இந்த உணவு முறையின் மூலமாகவும், சில உடற்பயிற்சிகளின் மூலமாகவும், தான் 10 கிலோ குறைந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். இறுதியாக, இந்த கீட்டோ உணவு முறையின் முக்கிய நன்மைகளைப் பட்டியலிட்ட பிறகு, நாம் கவனிக்க வேண்டிய ஒரு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி படைக்கப்படவில்லை என்றும், ஒவ்வொருவரின் உடல்வாகும் மாறுபட்டுள்ளது என்பதுதான்.
எனவே இந்த கீட்டோ உணவுமுறை ஒருவருக்கு நலம் பயக்கக்கூடியதாக இருக்கும் வேளையில், வேறு ஒருவருக்கு பாதகமாக மாற வாய்ப்புகள் உண்டு. எனவே இந்த உணவு முறையை பின்பற்ற விரும்பினால், முதலில் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, அதற்கு தேவையான பரிசோதனைகளை செய்து, உங்களுக்கு இந்த உணவு முறையை ஏற்றதா என்பதை கண்டறிந்த பிறகே, இதை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.