சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தனது 28 வயது மகன் தொழில்நுட்ப வல்லுநராக இருந்து வந்ததாகவும். ஆனால் அந்த வேலையிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அவர் போதைப்பொருள் கலந்த வேப் எனப்படும் “Kpods” பயன்படுத்துவதற்கு அடிமையாகிவிட்டார் என்றும் கூறியுள்ளார் ஒரு சிங்கை தாய்.
ஒரு நாள் போதைக்கு அடிமையான அவர் பணம் கேட்டு தன்னை மிரட்டியதாகவும், அதன் பிறகு தனது ஐந்து வயது மகனுடன் அவர்களின் HDB பிளாட்டில் இருந்து குதிக்கப்போவதாக இரண்டு முறை தன்னை மிரட்டியதாகவு அந்த தாய் கூறியுள்ளார்.
58 வயதான வோங் (பெயர் மாற்றப்படுள்ளது) பிரபல செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் “தனது மகன் நிதிப் பிரச்சினைகளால் சிரமப்பட்டு வருவதாகவும்”, ஆகவே தான் நன்றாக தூங்க உதவும் என்று, அவரது நண்பர்கள் சிலர் கூறிய பிறகு தான் அவர் இந்த வேப் எனப்படும் மின் சிகிரெட்களை பயன்படுத்தத் தொடங்கியதாகவும் கூறினார் அவர்.
தொடர் பணப் பிரச்சினைகள் காரணமாக, அவரது மகன் தனது மனைவியை பிரிந்து, தற்போது விவாகரத்து பெறும் நிலையில் இருப்பதாக அந்த தாய் கூறினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது மகனுக்கு வேலை கிடைத்தது, ஆனால் இரவு ஷிப்டில் வேலை செய்ய வேண்டியிருந்ததாலும், பகலில் தூங்க முடியாததாலும் இது அவரது மகனின் போதைப் பழக்கத்தை மேலும் தூண்டியது என்றும் அவர் கூறினார்.
“தன் மகன் ஒரு நாளில் ஐந்து கேபாட்கள் வரை புகைக்கிறார், ஒவ்வொன்றும் சுமார் $85 செலவாகும்” என்றும் தெரிவித்துள்ளார்.
போதை பழக்கத்தில் இருந்து தன் மகனை போல உள்ள பலர் அதைவிட்டு வெளியே வரவேண்டும் என்பதே அந்த தாயின் ஒரு வேண்டுகோளாக உள்ளது.
சிங்கை அதிரடி
இந்த சூழலில் தான் சிங்கப்பூர் அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி இனி மின் சிகரெட்களை பயன்படுத்துவோர் மீது புகையிலை சம்பந்தமான வழக்குகள் பதிவு செய்யப்படாமல், போதைப் பொருள் உட்கொண்ட வழக்கு பதிவு செய்யப்படும் என்று அதிரடி முடிவு ஒன்றை வெளியிட்டது.
மேலும் கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான மின் சிகரெட்களை சிங்கப்பூர் அரசாங்கம் பறிமுதல் செய்திருக்கிறது. அண்மையில் வீட்டிலேயே இந்த மின் சிகரெட்களை தயாரிக்க தேவையான பொருட்களை வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. தொடக்கத்தில் அவர் புகையிலை சம்பந்தமான வழக்கில் பிடிபட்ட நிலையில், அவர் மீது போதைப்பொருள் உருவாக்கும் வழக்கு பதியப்பட்டு தற்பொழுது அவருக்கு 16 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
போதை பொருட்களை இரும்பு கரம் கொண்டு சிங்கப்பூர் அரசு தடுத்து வரும் நிலையில் மக்களும் அதற்கு ஆதரவு தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.