சிங்கப்பூர் உலகளாவிய அளவில் ஊழல் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது என்பது ஒரு மிகப்பெரிய சாதனை. 14 ஆண்டுகள் கழித்து சிங்கப்பூர் மீண்டும் உலகளவில் ஊழல் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் 3ஆவது இடத்தைப் பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கும் நிகழ்வாகும்.
இது உலகளாவிய ஊழல் எதிர்ப்பு அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்ட ஊழல் உணர்வு குறியீட்டு (CPI) அறிக்கையின் படி பிப்ரவரி 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் அறிக்கையானது சிங்கப்பூரை உலகின் மூன்றாவது குறைந்த ஊழல் உள்ள நாடாக தரவரிசைப்படுத்தியுள்ளது, இது 2020 முதல் குடியரசின் மிக உயர்ந்த நிலையாகும்.
சிங்கப்பூர் ஊழல் குறியீட்டு மதிப்பெண்களில் 100ல் 84 புள்ளிகளை பெற்றுள்ளது. இது மிகவும் தூய்மையான நிலைக்கு 100 மற்றும் மிக அதிக ஊழலுக்காக 0 என மதிப்பிடப்படும் அளவுகோலின் அடிப்படையில் ஆகும். 2023ஆம் ஆண்டு 5ஆவது இடத்தில் இருந்த சிங்கப்பூர் தற்போது இரண்டு இடங்கள் முன்னேறி 3ஆவது இடத்தை பெற்றுள்ளது.
ஊழல் எதிர்ப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கையின் படி, CPI 180 நாடுகளையும் பகுதிகளையும் அரசு துறையில் உள்ள ஊழல் நிலைகளை நிபுணர்கள் மற்றும் வணிகர்கள் கண்டறிந்த அளவின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தியுள்ளது. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் லஞ்ச ஊழல் குறைந்த நாடாக இருந்த நியூசிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முன்னேறி உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
டென்மார்க் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. இது 100க்கு 90 தரப் புள்ளிகளைப் பெற்றுள்ளது. லஞ்ச ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் டென்மார்க் தொடர்ந்து முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய நாட்டின் மதிப்பெண்ணைத் தொடர்ந்து பின்லாந்து (88), சிங்கப்பூர் (84), நியூசிலாந்து (83) மற்றும் லக்சம்பர்க் (81) ஆகியவை உள்ளன.
இந்த பட்டியலில் இந்தியா 96 வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த தரவரிசையில் சிங்கப்பூர் தான் முதல் பத்து இடங்களைப் பிடித்த ஒரே ஆசிய நாடு. இந்த சாதனை சிங்கப்பூரின் வலுவான சட்ட கட்டமைப்புகள் மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளின் விளைவாக கிடைத்துள்ளது.