சிங்கப்பூரில் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கார் ஓட்டக் கற்றுக்கொண்ட டீன் ஏஜ் சிறுவன் (வயது 17), தனது தந்தையின் NRIC-யைப் (National Registration Identity Card) பயன்படுத்தி Tribe Car கார்களை பலமுறை வாடகைக்கு எடுத்துள்ளார். பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு பயணிகளையும் அவர் தன்னுடன் ஏற்றிச் சென்றுள்ளார். இறுதியாக அவர் தனது எட்டாவது பயணத்தின் போது காவல்துறை சாலைத் தடையை எதிர்கொண்டபோது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.
கைதான அந்த 17 வயது நபர், தனது தந்தைக்கு தெரியாமல் Tribe Car மூலம் எட்டு முறை கார்களை வாடகைக்கு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Tribe Car என்பது சிங்கப்பூரில் செயல்படும் வாடகை கார் சேவையாகும். கடந்த செப்டம்பர் 24, 2020க்கு சில காலத்திற்கு முன்பு, அந்த இளம் நபர் தனது தந்தையின் பெயரைப் பயன்படுத்தி டிரைப்கார் கணக்கிற்கு விண்ணப்பித்துள்ளார். மேலும் தனது 56 வயதான தந்தையின் விவரங்களான, NRIC மற்றும் ஓட்டுநர் உரிமத்தை சமர்ப்பித்து, விண்ணப்பத்தை அங்கீகரித்துள்ளார்.
செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 7, 2020 வரை சுமார் இரண்டு வார காலத்திற்குள் 8 முறை கார்களை ட்ரைபேகாரில் இருந்து வாடகைக்கு எடுத்துள்ளார். எட்டாவது முறையாக அக்டோபர் 7, 2020 அன்று, அந்த இளம் நபர் இரண்டு பயணிகளுடன் காரில் சென்றுள்ளார். அப்போது அந்த வாலிபருக்கு 17 வயது என்பதும், அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் பயணிகளுக்குத் தெரியவில்லை. இறுதியில் ஒருநாள் அந்த வாலிபர் சிக்கினார். ஒருநாள் அதிகாலை 2.57 மணியளவில், மத்திய விரைவுச் சாலை ஸ்லிப் சாலையில் ஆங் மோ கியோ அவென்யூ 5 நோக்கிச் செல்லும்போது போலீஸ் சாலைத் தடுப்பில் அவர் வாகனம் ஓட்டியபோது, போலீசாரிடம் பிடிபட்டார்.
தற்போது 19 வயதாகும் அந்த இளம் நபரின் அடையாளம் “குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுவதால், அவரின் பெயரை குறிப்பிட நீதிமன்றம் மறுத்துள்ளது. குறைந்த வயதுடைய நபர்கள் வாகனம் ஓட்டினால், முதல் முறை அந்த குற்றத்தை செய்யும்போது மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை, S$1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.