இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே தற்போது தடுப்பூசி போடப்பட்ட பயணப்பாதை தொடங்கவுள்ளது, மேலும் VTL மற்றும் VTL அல்லாத பயணத்திற்கான விமான டிக்கெட் முன்பதிவுகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருந்து இந்த விமானங்கள் இயக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருச்சி – சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் – திருச்சி இருமார்கமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், Scoot மற்றும் Indigo ஆகிய விமான சேவை நிறுவனங்கள் இம்மாத இறுதியில் இருந்து விமானங்களை இயக்கவுள்ளது இதற்கான புக்கிங்கும் தொடங்கியுள்ளது.
ஆனால் இந்த பயணங்களுக்கான விமான டிக்கெட் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளதாக நமது தமிழ் சாகா சிங்கப்பூருக்கு மிக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்து வருகின்றது. முன்பு இருந்ததை விட சுமார் இரண்டு மடங்கு வரை விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான டிக்கெட்கள் விரைவில் புக் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சிங்கப்பூர் விமான சேவை நிறுவனங்கள் தொடக்கத்தில் நடுத்தர விலையில் டிக்கெட்களை வழங்கி வந்தாலும் தற்போது அந்த விமான சேவை நிறுவன டிக்கெட்களும் விலை ஏற்றம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது உள்ள சூழ்நிலையில் மக்கள் கூட்டம் டிக்கெட்களை முன்பதிவு செய்ய அலைமோதி வருகின்றனர் என்றால் அது மிகையல்ல. சிங்கப்பூர் மற்றும் இந்தியா என்று இருமார்கமாக டிக்கெட்கள் கிடைப்பதால் மக்கள் இணையத்தில் முன்பதிவு செய்ய குவிகின்றனர். அதே சமயத்தில் பலர் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக தெரிந்துகொள்ளாமல் டிக்கெட்களை முன்பதிவு செய்துவிட்டு தற்போது சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எடுத்துக்காட்டாக : VTL மூலம் பயணிக்க ஆவணங்களை தயார் செய்துகொண்டு திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ஆனால் VTL சேவை சென்னையில் இருந்து மட்டுமே தற்போது சிங்கப்பூர் செல்வதற்கு அதிலும் குறிப்பிட்ட விமான சேவை நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பலர் பெரும் பொருள் இழப்பிற்கு ஆளாகி வருகின்றனர். அதே போல டிக்கெட் ஏஜென்ட்கள் பலரும் இந்த சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.
பல காலம் கழித்து எல்லைகள் திரைக்கப்பட்டுள்ளது என்றாலும் பயணிகள் சற்று நிதானமாக, உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தங்களது டிக்கெட்களை புக் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.