ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடல்,கப்பல், மற்றும் கடல்சார் ஆற்றல் தொழில்களில் பல்வேறு விதமான பங்களிப்புகளை வழங்கி வரும் ஓர் உலகளாவிய நிறுவனம். பல்வேறு நாடுகளிலும் கிளைபரப்பி வளர்ந்து நிற்கும் இந்த நிறுவனம், தனது பணியாளர்களின் நலன்களில் கவனம் செலுத்த தவறியதாக சமூக ஊடகங்கள் வழியாக சுட்டிக்காட்டப்பட்டு, அதற்காக தன் பணியாளர்களிடம் மன்னிப்பும் கேட்டு சிங்கப்பூரின் சமீபத்திய கவனயீர்ப்பு செய்தியாக மாறி இருக்கிறது.
ஜலான் துகாங் தங்குமிடம் !
3,400 படுக்கை வசதிகள் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தங்குமிடம். செம்ப்கார் நிறுவனத்திற்கு என சொந்தமாக பல தங்குமிடங்கள் இருந்த போதிலும், அவை அனைத்தும் நிறைந்து விட்டதால் ஜலான் துகாங் தங்குமிடத்தில் 40 % அளவுக்கு – ஏறக்குறைய 1400 பேர் – செம்ப்கார் நிறுவன பணியாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி சிங்கப்பூரின் சமூக வலைதளமான Weixin-னில் அந்தப் பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்படுகிற உணவு சுகாதாரமாக இல்லை என்பது குறித்து செய்திகளை பதிவிட்டு இருந்தனர். உணவுகளில் பூச்சிகள், புழுக்கள், தலைமுடி கிடப்பவை போன்ற புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து இருந்தனர். பின்னூட்டமாக தங்களது நிறுவனத்தையும் இணைந்திருந்தனர். அதுமட்டுமின்றி பெருந்தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டவர்களும், இல்லாதவர்களும் ஒரே அறையில் தங்க வேண்டிய சூழல் நிலவுவதாகவும், அதனால் பலர் தங்களது அறைகளுக்கு வெளியே தங்குவதாகவும் செய்திகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
அது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியவுடன், இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட செம்ப்கார் மரைன் நிறுவனம்,விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அது குறித்த அறிக்கையை அக்டோபர் 15ம் தேதி வெளியிட்டு இருக்கிறது.
ஜெலான் துகாங் தங்குமிடத்தில் பொறுப்பாளரிடம் இது குறித்து பேசப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தரமான உணவு வழங்கும் வழங்கப்படுவதாகவும், பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள், தங்குமிடத்தின் சுகாதாரம், பரிசோதனை மேற்கொண்டவர்கள் – பெருந்தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டவர்கள்- அவர்களுக்கான பராமரிப்பு – இவை குறித்து எழுந்த குற்றச்சாட்டுகளும் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி போட்டுக் கொண்ட பணியாளர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு பெருந்தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட பணியாளர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
உணவின் தரம் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், உணவு வழங்கும் நேர இடைவெளியும் பணியாளர்களுக்கு ஏற்றபடி மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிறுவனம் புதிதாக வழங்கப்படுகிற உணவு குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறது.
இந்த பெருந்தொற்றுக்கு பிறகு மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுவதுமாக பின்பற்றவும், இன்னும் எந்த விதங்களில் எல்லாம் பணியாளர்களுக்கு தேவையான சுகாதார நடவடிக்கைகள் குறைவு படுகின்றன என்பதை அறிந்து கொள்ளவும், இது ஒரு வாய்ப்பாக விளங்கியதாக தெரிவித்துள்ள நிறுவனம், தங்கள் கவனக் குறைபாட்டால் இதுவரை பணியாளர்கள் அனுபவித்த எதிர்மறை அனுபவங்களுக்காக அவர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது.