ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகமெங்கும் ,தொடர்ந்து கொண்டிருக்கும் பெருந்தொற்று, அதைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட நாடுகளுக்கிடையேயான பயணக் கட்டுப்பாடுகள், பல்வேறு நாடுகளில் அமலில் இருந்த, இருந்து கொண்டிருக்கிற ஊரடங்கு கெடுபிடிகள், ஆகியவற்றின் விளைவாக சிங்கப்பூரின் மக்கள் தொகை ஒரே ஆண்டில் 5.69 மில்லியன்களிலிருந்து 5.45 மில்லியனாக குறைந்துள்ளது.
சிங்கப்பூர் பிரதம அமைச்சர் அலுவலகத்தில் இயங்கக்கூடிய தேசிய மக்கள் தொகை பிரிவானது, ஏறக்குறைய 1950ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிபரங்களை சேகரித்து வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் 2020 ஜூன் முதல் 2021 ஜூன் வரையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் செப்டம்பர் 28ம் தேதி வெளியிடப்பட்டுள்ளன. கணக்கெடுப்பு முறை தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து நடக்காத பல்வேறு ஆச்சரியங்கள் இந்த ஆண்டு நடைபெற்றிருக்கின்றன. புள்ளிவிபரங்களின் சில முக்கிய ஆச்சரியமூட்டும் அதிர்ச்சியூட்டும் விபரங்கள் இங்கே.
கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது 2020ம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கை 0.3 சதவீதம் குறைந்திருந்தது. 2020 – 21-ல் அது பலமடங்கு அதிகரித்து 4.6 சதவிகிதம் குறைந்து 5.69 மில்லியன்களாக இருந்த மக்கள் தொகை 5.45 மில்லியன்களாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை மூன்றே மூன்று முறைகள் தான் மக்கள் தொகை எண்ணிக்கை குறைவுபட்டிருக்கிறது. முதலாவது குறைவான மக்கள் தொகை 1986 பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது 0.1சதவிகிதம் மட்டுமே குறைந்து இருந்தது.
அதற்கு அடுத்ததாக 2020 (0.3%) அதைத் தொடர்ந்து இப்போது 2021 (4.1%). அடுத்தடுத்து ஆண்டுகளாக சிங்கப்பூரின் மக்கள் தொகை குறைந்தது இதுவே முதல் தடவை. சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கையும் ஓரளவிற்கு குறைந்துள்ளது என்றாலும், குடியுரிமை பெறாதவர்களின் எண்ணிக்கை அதிக அளவாக ஏறக்குறைய 10.7 % குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு 2.6 சதவிகிதமாக இருந்தது.
வேலை வாய்ப்புக் குறைவு, தொற்று முடக்கங்கள், பொருளாதார நிலை, போன்றவை இதற்கு காரணமாக கணிக்கப்பட்டுள்ளது, சிங்கப்பூர் குடிமக்களின் எண்ணிக்கை 0.7 % குறைந்து 3.5 மில்லியனாகவும், நிரந்தர குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 6.2 % குறைந்து 0.49 மில்லியனாகவும் இருக்கிறது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் மக்கள் தொகை இவ்வளவு குறைந்தது இதுவே முதல் தடவை என்று புள்ளியியல் துறையும் தெரிவித்துள்ளது. 12 மாதங்களுக்கும் மேலாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் சிங்கப்பூர் குடிமக்களும், சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெற்ற குடிமக்களும், சிங்கப்பூர் குடியிருப்பு மக்கள் தொகை எண்ணிக்கைக்குள் இணைக்கப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பக்கத்தில் வெளிநாடுகளில் இருக்கும் சிங்கப்பூர் குடிமக்களின் எண்ணிக்கையும் 2011ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக குறைந்துள்ளது. சிங்கப்பூர் குடியுரிமை பெற்று இருந்தாலும் ஆண்டின் பெரும்பாலான நாட்களை வெளிநாடுகளிலும் வெளிநாட்டுப் பயணங்களிலும் செலவிடுபவர்களின் பின்னணியில் இந்த விபரங்கள் பெறப்பட்டுள்ளது.
மக்கள் தொகை ஒரு புறம் பெரிய அளவில் குறைந்திருந்தாலும் மறுபுறம் கடந்த ஆண்டில் புதிதாக 21,085 புதிய குடியுரிமை அனுமதிகளும், 27,470 நிரந்தர குடியுரிமை அனுமதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவையும் கூட 2019ஆம் ஆண்டு ஒப்பிடும்போது எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கின்றன.
மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது
மக்கள் தொகை எண்ணிக்கை சரிவுக்கு காரணம் இந்த பெருந்தொற்று காரணமாக உருவாக்கப்பட்ட செயல்பாட்டு வரம்புகளும், பயணக்கட்டுப்பாடுகளுமே. உதாரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டி குடியுரிமை பதிவுக்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகளை முடிக்க வேண்டியவர்களும், நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களும் நேரடியாக வந்து முடிக்கவேண்டிய இறுதிகட்ட வேலைகளை முடிக்க முடியாததும் கூட இந்த வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமையலாம் .
அதிகளவிலான மக்கள் தொகை வீழ்ச்சிக்கு காரணம் குடியேற்றம் பெறாத தொழிலாளர்கள் என்பது கருத்தில் கொள்ளப்பட்டு, குடியேற்றத்தின் வேகம் தொடர்ந்து அளவிடப்பட்டு அது நிலையானதாக இருக்கும் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.