லிட்டில் இந்தியாவை சுற்றிய பகுதிகளில் போலீசார் அதிரடி ஆய்வில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசின் விற்பனை மற்றும் நுகர்வோர் விதிமுறைகளை மீறியதாக கிடைத்த தகவலின் பெயரில் மதுபான கடைகள் உட்பட 14 கடைகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லிட்டில் இந்தியா பகுதிகளில் உள்ள சில கடைகளில் விதிமுறைகள் மீறப்படுவதாக 28-ம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள சில மதுபான கடைகளில் அரசின் கட்டுப்பாடுகளுக்கும் மாறாக குடிமக்கள் அமர்ந்து குடிப்பதற்காக மறைவான இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. லைசன்ஸ் வாங்கியுள்ள பெரிய கடைகளைத் தவிர சிறு கடைகளில் உட்கார்ந்து குடிப்பதற்கான உரிமம் கிடையாது. விதிமுறைகளை மீறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் சோதனை நடத்தினர்.
அது மட்டுமல்லாமல் மதுபான கடைகளில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை ஏழு மணியிலிருந்து இரவு பத்தரை மணி வரையிலும் சனி,ஞாயிறு, பொது விடுமுறை நாளுக்கு முந்திய நாள் மற்றும் பொது விடுமுறை நாள்களில் காலை ஏழு மணி முதல் இரவு 7:00 மணி வரை மட்டுமே மதுபானங்கள் விற்க வேண்டும்.அவ்வாறு விதிமுறைகள் மீறி விற்கப்பட்டால் 10000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும் மேலும் உரிமம் இல்லாமல் குறிப்பிட்ட லைசன்ஸ் இல்லாமல் மதுபானங்களை விற்கும் கடைகளுக்கு 20000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும். அதே குற்றத்தினை திரும்ப செய்யும் பட்சத்தில் 20000 வெள்ளி அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இந்நிலையில் சோதனையில் விதிமுறைகளை மீறியதாக கண்டுபிடிக்கப்படும் கடைகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.