TamilSaaga

சிங்கப்பூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த முருகன் குத்தாலம் .. முடிவடைந்த விசாரணை – நடந்தது என்ன?

சிங்கப்பூரில் காவல் துறையின் தேசிய சேவை துறையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மின்சார கம்பி வடங்களை திருடியபோது மின்சாரம் தாக்கியதில் 27 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு ஊழியர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இந்நிலையில் அந்த வெளிநாட்டு ஊழியரின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் முடிவு குறித்து நேற்று ஆகஸ்ட் 5-ஆம் தேதி தகவல் வெளியானது.

முருகன் குத்தாலம் என்ற அந்த ஊழியர் STIE என்ற நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு அவருக்கு பயிற்சிகள் ஏதும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் மின்சார பணிகளை மேற்கொள்ள உரிய பயிற்சி பெற்ற சில ஊழியர்களுடன் இணைந்து கடந்த மாதம் அக்டோபர் 15-ஆம் தேதி முருகனும் அந்த பணியிடத்திற்கு சென்றுள்ளார்.

அவர்கள் சென்ற அந்த தினத்தில் மின்சார கம்பி வடங்களை நீக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த கம்பி வடங்களை வெட்டி திருடி லாபத்திற்கு விற்பதற்கு விரும்பிய அந்த பணியாளர்கள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்த வேளையில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி முருகன் உயிரிழந்தார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட சமூக நிறுவனமான Its Raining Raincoats முருகனுக்கு ஒரு இளம் மகன் இருந்ததாக தனது வலைதள பதிவில் தெரிவித்துள்ளது. மேலும் இணையம் மூலம் முருகன் குடும்பத்திற்கு 6841 வெள்ளி நிதி திரட்டப்பட்டுள்ளது.

Related posts