SINGAPORE: சிங்கப்பூரில் பணியிட விபத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் இறப்பதும், படுகாயமடைவதும் இந்த ஆண்டு தொடர்ந்து நீடித்து வருகிறது.
கடந்த வாரம் கூட, அதாவது ஜூலை 30ம் தேதி, Towner சாலையில் உள்ள வீட்டுவசதி வாரியத் திட்ட தளத்தில் மண் கலவை இயந்திரம் ஒன்று அதன் Mast சேதமடைந்த நிலையில், முறிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Mast என்பது பெரிய இயந்திரங்களை தாங்கி நிற்கும் தூண் போன்ற ஒரு அமைப்பாகும், காலை 9.30 மணியளவில் பணியாளர்கள் பலர் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில் நடந்த இந்த பணியிட விபத்தில் ஏற்பட்டது. இதில், கண்ணிமைக்கும் நேரத்தில் பல ஊழியர்கள் உயிர் தப்பினர்.
இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 31 வெளிநாட்டு ஊழியர்கள் பணியிடத்தில் இறந்துள்ளனர். குறிப்பாக, கடந்த 2 மாதங்களில், இரண்டு தமிழக ஊழியர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். அதில், ராஜேந்திரன் எனும் ஊழியரும் அடக்கம். மூன்று பெண் குழந்தைகளுக்கு தந்தையான ராஜேந்திரனின் (வயது 32) மரணம் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் உலுக்கிவிட்டது.
இதையடுத்து, நமது “தமிழ் சாகா சிங்கப்பூர்” தளத்தின் முன்னெடுப்பு காரணமாக, அவரது குடும்பத்துக்கு சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் மூலம் ரூ.18,000 வரை நிதியுதவி கிடைத்தது.
இந்த சூழலில், ஒரு முக்கிய தகவலை சிங்கப்பூர் மனிதவளத்துறையின் மூத்த அமைச்சர் Zaqy Mohamad வெளியிட்டுள்ளார். அதன்படி, பணியிடத்தில் தகுந்த பாதுகாப்பின்றி ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, விபத்து ஏற்பட்டாலோ, அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இயக்குனர்கள் மீது வழக்கு தொடர முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். சிங்கை பாராளுமன்றத்தில் பணியிட விபத்து குறித்து கேள்வி எழுப்பிய எம்.பி Melvin Yong-ன் கேள்விக்கு பதிலாக அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த பதில் மிக முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், சிங்கப்பூரில் பரவலாக பல இடங்களில் அடுத்தடுத்து பணியிட விபத்து ஏற்படுகிறது. வாரத்துக்கு ஒரு விபத்து எந்த நிலை தான் தற்போது நிலவுகிறது. இந்த சூழலில், சம்பந்தப்பட்ட கம்பெனியின் CEO மற்றும் Director’s மீதே வழக்கு என்பது இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
இதுகுறித்து சிங்கை பாராளுமன்றத்தில் பேசிய எம்.பி Yong, “சிங்கப்பூரில், நாம் செய்யும் எல்லாவற்றிலும் திறமையாகவும், கவனத்துடனும் இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம், நாம் நிச்சயமாக இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும், மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும். அதிகரித்து வரும் பணியிட மரணங்களைத் தடுக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் “அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மட்டும் போதாது”.
முதலாளிகள் அதிக வேலை கொடுத்து ஊழியர்களை தள்ளுவதால், வேலை நடைபெறாது. விபத்துக்களும் அதனால் மரணங்களும் தான் ஏற்படும். நாம் நிச்சயம் இதனை தடுத்து நிறுத்தியாக வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் Zaqy, “மனிதவள அமைச்சகம் (MOM) சமீபத்திய பணியிட இறப்புகள் குறித்து மிகவும் கவலை கொண்டுள்ளது, மேலும் சமீபத்திய அபாயகரமான விபத்துக்கள், பல நிறுவனங்கள் இடர் மதிப்பீடுகளை மேற்கொள்ளவில்லை அல்லது பாதுகாப்பான பணி நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதைக் காட்டுகிறது. எனவே, இனி வரும் காலங்களில் பணியிடத்தில் தகுந்த பாதுகாப்பின்றி ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, விபத்து ஏற்பட்டாலோ, அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இயக்குனர்கள் மீது வழக்கு தொடர முடியும் என்று தெரிவித்தார்.