TamilSaaga

“மகா மாரியம்மன் கோவில்” : வரலாற்று சிறப்புமிக்க தீமிதி திருவிழாவுக்கு தயாராகும் சிங்கப்பூர்

புலம்பெயர்தல் என்பது வெறுமனே பிழைப்பு தேடி ஒரு நாட்டிற்கு சென்று திரும்புவது மட்டுமல்ல! அங்கிருக்கிற நல்லவைகளை கற்றுக் கொள்வதோடு, நம்மிடம் இருக்கிற நற் செல்வங்களை விட்டு வருவதும் தான். அதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள் தமிழர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. உலகெல்லாம் தமிழர்கள் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற எல்லா இடங்களிலும் அவர்களின் மண் சார்ந்த, மரபு சார்ந்த, மத நம்பிக்கை சார்ந்த, ஏதாவது ஒரு அழியாத அடையாளத்தை நிலைநாட்டி இருக்கிறார்கள். அதன் ஒரு மிகப்பெரும் அடையாளம்தான் சிங்கப்பூர் மகாமாரியம்மன் கோயில்

ஏறக்குறைய 194 நான்கு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோயிலில், 1842 ல் இருந்து நடந்து கொண்டிருக்கிற தீமிதிப்பு திருவிழா மிக மிக பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. மூன்று மாதங்கள் கொண்டாடப்படும் இந்த நீண்ட திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா அதிகம் கவனத்தை ஈர்க்கக் கூடிய ஒரு பெருவிழாவாக சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.

2021-ம் ஆண்டிற்கான தீமிதி திருவிழா ஆகஸ்ட் 16 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 24 அக்டோபர் அன்று தீமிதி நிகழ்வு நடைபெற்று, 28 அக்டோபர் 2021 அன்று நிறைவு பெறுவதாக கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற தீமிதி திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்ற இந்த வேளையில் அந்தக் கோயில், மற்றும் திருவிழாவை பற்றிய ஒரு பார்வை.

கோயிலின் வரலாறு

இந்த மகா மாரியம்மன் கோவிலானது, தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் கடலூர் போன்ற இடங்களில் இருந்து சிங்கப்பூர் சென்ற தமிழ்மக்களால் 1827 அமைக்கப்பட்டது. புலம்பெயர்ந்து வந்த இடத்தில் தங்கள் தெய்வத்திற்கு வழிபாடு செலுத்த வேண்டும் எனும் தமிழ் இந்து மக்களின் பெரு விருப்பத்திற்கு ஏற்ப, கடலூரில் இருந்து தமிழர் ஒருவர் தன்னோடு எடுத்துவந்த அம்மன் சிலை ஒன்றை மரப்பலகையுடன் கூடிய ஒரு சிறு குடில் அமைத்து ‘சின்ன அம்மன்’ என்கிற பெயரில் நிறுவி வழிபட ஆரம்பித்ததில் இருந்து தொடங்குகிறது கோவிலின் ஆன்மீக வரலாறு.

அதற்கு முன்னதாக இந்த கோயில் உருவாக, காரணகர்த்தாவாக இருந்த திரு. நாராயண பிள்ளை என்பவரின் பெரும் முயற்சியால் இந்த கோவிலுக்கான நிலத்தை கிழக்கிந்திய கம்பெனி 1822 ல் வழங்குவதாக தெரிவித்து,

1823 இப்போதுள்ள சவுத் பிரிட்ஜ் சாலையில் கோவில் கட்டிக் கொள்ள அனுமதி தரப்பட்டது.

1827 கோவிலின் அடித்தள பணி ஆரம்பிக்கப்பட்டு மரப்பலகை கூரையுடன் கூடிய சிறிய கோயிலில் சின்ன அம்மனுக்கு வழிபாடுகள் தொடங்கியது.

1862 கூரையோடு இருந்த கோயில் முழுமையான செங்கல் கட்டிடமாக மாற்றப்பட்டது.

1962 செங்கல் கட்டிடமாக மாற்றப்பட்ட பிறகு பெரிய அளவில் 100 ஆண்டுகளாக மாற்றும் என்று இருந்த ஆலயம் இப்போதுள்ள நிலையில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டது .

திருமண மண்டபம், அரங்கம், போன்ற வசதிகளுடன் சிங்கப்பூர் அறக்கட்டளை வாரியத்தால் இந்த ஆலயம் நிர்வகிக்கப்படுகிறது .

ஜூன் 1936 முதல் குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பின்னர் 1949 ,1977, 1984, 1996 ஆகிய ஆண்டுகளில் குடமுழுக்கு கள் நடைபெற்றன.

ஆலயத்தின் முக்கிய விழாக்கள்.

1842 முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலில் அம்மனுக்கு தீமிதிப்பு விழா நடக்கிறது லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் ஒரு பெருவிழாவாக, ஆண்டுக்காண்டு அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை ஈர்க்கக்கூடிய ஒரு விழாவாகவே இந்த விழா அமைகிறது.

மேலும் நவராத்திரி நேரத்தில் இந்தக் கோயிலில் நடைபெறக்கூடிய 1008 சங்காபிஷேகம், மகா சத சண்டி யாகம், நவசக்தி அர்ச்சனை,போன்றவையும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாமாரியம்மன் கோயிலும், சீனர்களும்

கோயில் அமைந்துள்ள சவுத் பிரிட்ஜ் ரோடு சீனர்கள் அதிகம் வாழும் பகுதியில் அமைந்திருக்கும் காரணத்தால், இயல்பாகவே மாரியம்மன் கோயிலானது, அதிக அளவிலான சீன பக்தர்களையும் பெற்றுள்ளது. கோயிலின் எல்லா விதமான செயல்பாடுகளிலும் அதிக அளவிலான சீனர்கள் ஈடுபடுவது உண்மையிலேயே வியப்பிற்குரிய ஒன்றே!

கோயில் கட்டப்பட்ட நேரத்தில் பொருளுதவி கொடுத்தது, ஒவ்வொரு ஆண்டும் நடக்கிற தீமிதி திருவிழாவில் அதிக அளவிலான சீனர்கள் பங்கு கொள்வது போன்றவை எல்லைகள் இல்லாத ஒரு ஆன்மீக தேடலை உணர்த்த கூடியதாக இருக்கிறது.

ஆலயத்தின் சமூக சேவை

இந்த ஆலயத்தின் வரலாற்றை கூர்ந்து நோக்கும் போது இது வெறுமனே ஆன்மீக தேவைக்காகவும், சேவைக்காகவும் மட்டும் கட்டப்படவில்லை. மாறாக பிரித்தானிய ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து வேலை தேடி சிங்கப்பூர் வரும் தமிழர்களுக்கு அடைக்கலம் தரக்கூடிய ஒரு அன்னை இல்லமாகவே இது அமைந்திருக்கிறது.

வேலை தேடி முதன்முதலாக சிங்கப்பூர் செல்லக்கூடிய தமிழர்கள் ,அவர்களுக்கு நிலையான வேலை, தொழில்,தங்குமிடம் கிடைக்கும் வரை கோயிலில் தங்கி இருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைக்கும் இந்திய திருமணங்களை சட்டப்படி பதிவு செய்யு இந்த மகா மாரியம்மன் ஆலயம் செயல்பட்டுவருகிறது.

இங்கே திருமண சடங்குகளும் முறைப்படி நடத்தி வைக்கப்படுகிறது.

இப்போது மருத்துவ முகாம், இந்து சமய நிகழ்ச்சிகள், சமய வகுப்புகள், ஆகியவற்றை நடந்து நடத்துவதோடு கோவில் நிர்வாகம் பள்ளி குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கும் பேராதரவு நல்கி வருகிறது.

கோயில் வழிபாட்டு நேரம் மற்றும் திருவிழா குறிப்புகள்.

வாரத்தின் எல்லா நாட்களும் கோயிலானது காலை 7 முதல் 11.30 வரையிலும், மாலை 6 மணி முதல் 8 வரையிலும் பக்தர்களின் வழிபாட்டுக்காக கோயில் திறந்து வைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் 10-ஆம் தேதியிலிருந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மட்டும் கோவிலுக்குள் நுழையலாம் எனவும், அது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளும் கோவிலின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

16 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தீ மிதிக்க அனுமதி கிடையாது.

16 லிருந்து 20 வயதிலான பக்தர்கள் 16ஆம் தேதிக்கு முன்னதாக பெற்றோருடன் அல்லது பாதுகாப்பாளருடன் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

தீ மிதிக்கும் பக்தர்கள் எந்த காணிக்கை பொருட்கள், மாலை உள்ளிட்டவைகளை எடுத்துப் போகக்கூடாது.

திருவிழா நாட்களில், ஆன்மீக செயல்பாடுகள் தொடர்பான முன்பதிவிற்கு தனியாகவும்,தீ மிதிக்க முன்பதிவு செய்ய தனியாகவும்,இணையவழி முன்பதி வசதிகள் கோவில் வலைப் பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கோவில் நிர்வாகம், அரசு அதிகாரிகளோடு சேர்ந்து பாதுகாப்பான முறையில் திருவிழாவை நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கின்றன.

பங்கேற்பாளர்களின் கவனத்திற்கு தேவையான நிபந்தனைகளும் கோவிலின் இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த பெரும் தொற்று காலம் உருவாக்கியிருக்கிற மிகப்பெரிய அழிவு,எழ முடியாத சரிவு, எதிர்மறை அனுபவங்கள் எல்லாவற்றிலிருந்தும் மக்கள் மீண்டு நம்பிக்கையோடு பயணிக்க இந்த தீமிதி திருவிழா உதவியாக இருக்கட்டும்.

நேரமும் வாய்ப்பும் இருந்தால் இந்த வரலாற்று சிறப்புமிக்க கோயிலுக்கு நீங்களும் ஒருமுறை சென்று பார்த்து வாருங்கள்.

Related posts