TamilSaaga

சிங்கப்பூர் வேலைக்கு ஆசை காட்டி மோசடி! லட்சம் லட்சமாக வசூல்…. முக்கிய குற்றவாளி கைது!

சிங்கப்பூர் வேலை மோசடி (Singapore Job Scam): கோவையில் இளைஞர்கள் ஏமாற்றம், முக்கிய குற்றவாளி கைது

கோவை மாவட்டம், சின்னியம்பாளையம் பகுதியில் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் தலா ஒரு லட்சம் ரூபாய் பெற்று, தனியார் நிறுவனம் ஒன்று மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டதால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவர், கோவை சின்னியம்பாளையம் பகுதியில் “இன்பினிட்டி டிராவல்ஸ் அண்ட் அசோசியேட்ஸ்” என்ற பெயரில் அலுவலகம் ஒன்றை அமைத்து, சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்துள்ளார். வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்பிய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள், அந்த விளம்பரத்தை நம்பி அலுவலகத்தை தொடர்பு கொண்டனர்.

பாரதிராஜா, அலுவலகத்தில் ஒரு இளம் பெண்ணை மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பணியமர்த்தியுள்ளார். தொடர்பு கொண்ட இளைஞர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் நேர்காணலுக்கு வருமாறு பாரதிராஜா அறிவிப்பு வெளியிட்டார். நேர்காணலுக்கு வந்த இளைஞர்களை வாட்ஸ்அப் மூலம் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஒருவர் நேர்காணல் செய்துள்ளார். தொலைபேசி வழியாக நடைபெற்ற இந்த நேர்காணலை நம்பி இளைஞர்கள் ஏமாந்துள்ளனர்.

நேர்காணலில் தேர்வானவர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், 7 மணி முதல் 8 மணி வரையிலும் இரண்டு பிரிவுகளாக பணி ஆணை வழங்கப்படும் என்றும், அன்றைய தினம் ஒரு லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் பாரதிராஜா கூறியுள்ளார். சிங்கப்பூர் நிறுவனத்தில் பணிக்கு சேர்வதற்கு விமான பயண கட்டணம் மற்றும் சேவை கட்டணம் உட்பட 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும், அதில் ஒரு லட்சம் ரூபாயை மட்டும் உடனடியாக செலுத்த வேண்டும் என்றும், பாஸ்போர்ட்டை வழங்க வேண்டும் என்றும் பாரதிராஜா கூறியுள்ளார்.

இதனை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று காலை அந்த அலுவலகத்திற்கு வந்து தலா ஒரு லட்சம் ரூபாயை வழங்கியுள்ளனர். பாரதிராஜா அந்த பணத்தை அவசரம் அவசரமாக வாங்கிக் கொண்டு அதில் பாதி பணத்தை தனது நண்பர் ஒருவரிடம் கொடுத்து அங்கிருந்து கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். பின்னர், பணி ஆணை பெற வந்தவர்களுக்கு சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் உணவு ஏற்பாடு செய்து அங்கு அனுப்பியுள்ளார்.

பணம் கொடுத்து பணி ஆணை பெற்ற இளைஞர்கள், தாங்கள் வேலைக்கு சேரும் நிறுவனம் சிங்கப்பூரில் எங்கு அமைந்துள்ளது என்று கூகுளில் தேடியுள்ளனர். அப்போது, அங்கு குறிப்பிட்ட பெயரில் எந்த நிறுவனமும் இல்லாததும், அவர்கள் வழங்கிய பணி ஆணையில் பல்வேறு தவறுகள் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

பாரதிராஜா பணம் வசூல் செய்ததை அறிந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது இளைஞர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் கந்தசாமி தலைமையிலான காவல்துறையினர் பாரதிராஜா இளைஞர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மேலும், இதுவரை 68 பேரிடம் தலா ஒரு லட்சம் ரூபாய் பெற்று இருப்பதும் தெரியவந்துள்ளது. அலுவலகத்தில் இருந்த பாரதிராஜா மற்றும் பெண் ஊழியர் ஆகியோரை காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் கணினி உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். பாரதிராஜாவிடம் இருந்து ஆறு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய போலீசார், மீதமுள்ள பணம் யாரிடம் கொடுக்கப்பட்டது, அவர் எங்கு சென்றார் என்பது தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தங்கள் பெற்றோருடன் அந்த அலுவலகம் முன்பாக நீண்ட நேரமாக காத்திருந்தனர். இதையடுத்து காவல் துறையினர் கைது செய்யப்பட்ட பாரதிராஜாவிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மோசடி குறித்து பீளமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள பாரதிராஜாவின் கூட்டாளி செந்திலையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts