இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் சர்வதேச பிரிவான NPCI சர்வதேச கொடுப்பனவு லிமிடெட் (NIPL), UPI-PayNow நிகழ்நேர கட்டண இணைப்பை மேலும் மேம்படுத்தி, அந்த தளத்தில் மேலும் 13 வங்கிகளைச் சேர்த்துள்ளதாக நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நடவடிக்கை, இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் அதன் வரம்பை விரிவுபடுத்துவதையும் எல்லை தாண்டிய பணம் அனுப்புதலை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இன்று ஜூலை 17, 2025 முதல் செயல்பாட்டுக்கு வரும் இந்த மேம்பாட்டின் மூலம், இரு நாடுகளிலும் உள்ள பயனர்கள் எளிமையாக நிதியை அனுப்ப முடியும், இதனால் அவர்களுக்கு தேவையான சேவைகள் மேலும் அணுகக்கூடியதாகவும், வசதியாகவும் மாற்ற முடியும் என்று NPCI தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு பணம் அனுப்புவதற்கான விரிவாக்கப்பட்ட இந்த வலையமைப்பில் இப்போது மொத்தம் 19 வங்கிகள் அடங்கும். அவை.. பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, ஃபெடரல் வங்கி, HDFC வங்கி, IDFC FIRST வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, மற்றும் யூகோ வங்கி ஆகியவற்றுடன் ஆக்சிஸ் வங்கி, DBS பாங்க் இந்தியா, ICICI வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய 19 வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளது.
தடையின்றி UPI பயன்படுத்தலாம்
இனி இந்தியாவில் உள்ள பெறுநர்கள், BHIM, Google Pay மற்றும் PhonePe போன்ற UPI செயல்படுத்தப்பட்ட செயலிகள் மூலமாகவும், வங்கி செயலிகள் மூலமாகவும், இந்த 19 வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் வைத்திருக்கும் தங்கள் கணக்குகளில், சிங்கப்பூரிலிருந்து பணத்தைப் பெறலாம்.
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பணம் அனுப்புவது கனரா வங்கி, HDFC வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கி, ICICI வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றுடன் கிடைக்கிறது. சிங்கப்பூரில், DBS SG மற்றும் Liquid Groupன் வாடிக்கையாளர்கள் இந்த சேவையைப் பெறலாம்.
UPI-PayNow சேவை, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகத் தொடங்கப்பட்டது. இது தனிநபர்களிடையே எல்லை தாண்டிய நிதி பரிமாற்றங்களை எளிதாக்குகிறது.
இனி இந்திய பயனர்கள் UPI-ஐடி மூலம் நிதியைப் பெறலாம் மற்றும் சிங்கப்பூரில் உள்ள பயனர்களுக்கு அவர்களின் மொபைல் எண் அல்லது மெய்நிகர் கட்டண முகவரி (VPA) மூலம் நிதியை அனுப்பலாம். உலகின் முதல் கிளவுட் அடிப்படையிலான, நிகழ்நேர எல்லை தாண்டிய கட்டண முறையாக, இந்த முயற்சி உலகளாவிய கட்டண இணைப்பில் ஒரு முன்னோடி படியாகும்.