சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் உள்ளூர் டிஜிட்டல் லாக் நிறுவனமான My Digital Lock Pte Ltd, சுமார் S$1,00,000 அளவிற்கு தங்கள் வாடிக்கையாளர்களையும், நிறுவனத்தையும் ஏமாற்றி பின் தலைமறைவான முன்னாள் ஊழியர் பற்றிய தகவல் அளிப்போருக்கு S$5,000 வெகுமதியை வழங்க முன்வந்துள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதி வெளியான அந்த நிறுவனத்தின் முகநூல் பதிவில் முகமூடி அணியாமல் இருக்கும் “டிராவிஸ்” என்ற அந்த பலே ஊழியரின் புகைப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது.
அந்த நபர் மலேசியா அல்லது இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்ல வாய்ப்புகள் இருப்பதால், அவரைக் கண்டுபிடிக்க போலீசாருடன் சேர்த்து பொதுமக்களின் உதவியையும் அந்த நிறுவனம் நாடியுள்ளது. “மலேசிய எல்லை திறந்தவுடன் அந்த நபர் மலேசியாவிற்கு தப்பிச் சென்றுவிட்டால் அவரைக் கண்டுபிடிப்பது எங்களுக்கு இன்னும் சவாலாகிவிடும்” என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று ஏப்ரல் 1ம் தேதி அந்த நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், PayNowல் ஒருவர் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கின் பெயரை நிறுவனத்தின் பெயருக்கு மாற்றுவது எப்படி என்பதைக் காட்டும் வீடியோவை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த நபரால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் ஆங்கிலத்தில் சரளமாகவோ அல்லது IT சம்மந்தமான பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாத முதியவர்கள் என்றும் அந்த வீடியோ கூறியுள்ளது.
கடந்த மார்ச் 29 அன்று வெளியான அந்த நிறுவனத்தின் ஒரு காணொளியில், My Digital Lockன் நிறுவனர் Ron பேசும்போது, அவர்களின் Bukit Batok கிளையைச் சேர்ந்த டிராவிஸ், வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை மோசடி செய்ததாகக் கூறுகின்றார். வீட்டுக் கதவுகள், வாயில் கதவுகள் மற்றும் அதற்கான டிஜிட்டல் பூட்டுகளை விற்கும் எங்கள் நிறுவனத்தில் வேலைபார்த்த அவன் வாடிக்கையாளர்களை ஏமாற்றி நிறுவனத்திற்கு வரவேண்டிய பணத்தை தனக்கு அனுப்பிக்கொண்டதை தெளிவுபடுத்தினார்.
சில வாடிக்கையாளர்களிடம் எங்கள் நிறுவனம் Card Paymentகளை ஏற்றுக்கொள்வதில்லை என்று கூறி சிலரிடம் பணமாக பெற்று ஏமாற்றியுள்ளான் இந்த பலே ஆசாமி. இப்படி நிறுவனத்திற்கு தெரியாமல் பணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து திருடிய நிலையில் சில தினங்களுக்கு முன்பு பெருந்தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்யப்பட்ட நிலையில் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளான் அவன்.
இந்த இடைப்பட்ட காலத்தில் வாடிக்கையாளர்கள் பொருள் வந்து சேரவில்லை என்று நிறுவனத்தை நாடியபோது தான் நிறுவனத்திற்கு அந்த நபரின் தில்லுமுல்லு வேலை தெரியவந்துள்ளது. திடுக்கிட்டுப்போன அந்த நிறுவனம் தற்போது போலீசில் புகார் அளித்ததோடு பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.