சிங்கப்பூரில் தினசரி தொற்றின் அளவு கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 18) அன்று 1000ஐ கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் தீவில் மொத்தம் 1004 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் சிங்கப்பூரில் ஒரு மரணமும் இந்த பெருந்தொற்றால் நிகழ்ந்துள்ளது. தடுப்பூசி போடப்படாத 90 வயதான சிங்கப்பூரர் ஒருவரை மரணித்துள்ளார்.அவருக்கு புற்றுநோய், இதய நோய் மற்றும் நிமோனியா வரலாறு இருந்தது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
இதுவரை சிங்கப்பூரில் 60 பேர் இந்த வைரஸ் நோயால் இறந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1,004 புதிய உள்ளூர் நோய்த்தொற்றுகளில், 926 சமூக வழக்குகள் மற்றும் 78 தங்குமிட குடியிருப்பாளர்கள் அடங்குவர். வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய 5 பேர் உள்பட சிங்கப்பூரில் நேற்று 1009 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி பதிவான 1,037 வழக்குகளுக்கு பிறகு பதிவான அதிகபட்ச ஒரு நாள் தொற்று இதுவாகும்.
சிங்கப்பூரில் மொத்தம் 863 வழக்குகள் தற்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆக்ஸிஜன் சப்ளிமெண்ட் தேவைப்படும் 105 நோயாளிகளுக்கு தீவிர நோய் உள்ளது, மேலும் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று MOH நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மிகவும் நோய்வாய்ப்பட்டவர்களில் 100 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர். கடந்த 28 நாட்களில், அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறிகள் உள்ள உள்ளூர் வழக்குகளின் விகிதம் 98.1 சதவீதமாக இருந்துவருகின்றது.
தீவில் சில பொது மருத்துவமனைகளில் லேசான கடுமையான சுவாச நோய்த்தொற்று (ARI) அறிகுறிகள் உள்ளவர்கள் A&E துறைகளில் சிகிச்சை பெறுவதை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டது. மேலும் “லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதைத் தவிர்க்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதற்கு பதிலாக ஒரு ஸ்வாப் அண்ட் செண்ட் ஹோம் (SASH) கிளினிக்கில் ஒரு பொது மருத்துவரை (GP) கலந்தாலோசிக்கவும்” என்று MOH அறிவுறுத்தியுள்ளது.