TamilSaaga

“பிரித்து வைத்த தொற்று” : மலேசியாவிலிருந்த பெற்றோர்க்கு இன்ப அதிர்ச்சி அளித்த “சிங்கப்பூர்” பிள்ளைகள் – வைரலாகும் Video

பெருந்தொற்றின் காரணமாக சர்வதேச அளவில் பல பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம். இந்தப் பயண கட்டுப்பாடுகளால் வெளிநாடுகளில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களை காண முடியாத சூழ்நிலை பலருக்கும் ஏற்பட்டது.

இன்றைய சூழலில், சர்வதேச அளவில், இந்தக் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, தடுப்பூசி போடப்பட்ட பயண பாதைகள் (vaccinated travel lanes) மூலம் தரைவழி போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே உள்ள தரை வழிப் பாதைகள் திறக்கப்பட்டுள்ளன.

அந்த இன்ப அதிர்ச்சி தரும் காணொளி


சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியாவை சேர்ந்த மூன்று சகோதர சகோதரிகளுக்கு இந்த கொரோனா பெருந்தொற்றின், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக தங்கள் பெற்றோரை காண முடியாத நிலை ஏற்பட்டது.

தற்சமயம் மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே உள்ள தரை வழிப் பாதைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மலேசியாவை சேர்ந்த இந்த உடன்பிறப்புகள் தங்கள் பெற்றோரை காணச் சென்றுள்ளனர். மலேசிய நாட்டை சேர்ந்த காய் ஈ சிங்கப்பூரில் சுமார் 12 வருடங்களாவும், அலெக்ஸ் சுமார் எட்டு வருடங்களாவும், காய் லி சுமார் ஐந்து வருடங்களாவும் பணிபுரிந்து வருகின்றனர்.பெற்றோரை இரண்டு வருடங்களுக்கு மேலாக காண முடியாத வருத்தத்தில் இருந்த இவர்கள், தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் மலேசியாவிற்கு புறப்பட்டு சென்று தங்கள் பெற்றோரை இன்ப அதிர்ச்சியில் தள்ளியுள்ளனர்.

33 வயதான காய் ஈ, தனது தம்பி அலெக்ஸ் மற்றும் தங்கை காய் லி ஆகியோர் தொலைபேசியில் தங்கள் பெற்றோரிடம் இந்த வருடம் தங்களால் மலேசியாவிற்கு பயணிக்க இயலாது என்றும் சீனப்புத்தாண்டுக்கு பிறகுதான் தங்களால் அவர்களை வந்து சந்திக்க இயலும் என்றும் கூறி அவர்களை நம்ப வைத்துள்ளனர். அதன் பிறகு தங்கள் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளனர். ஜோஹார் பஹ்ரு சிட்டி சென்டர் என்ற இடத்தில் இருக்கும் ஹாலிடே இன் உணவு விடுதிக்கு தங்கள் பெற்றோரை அழைத்து வருமாறு அவர்களுடைய மூத்த சகோதரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : கணைய மாற்று அறுவைசிகிச்சையை MOH அங்கீகரித்தது

இதனை அடுத்து டிசம்பர் 6ஆம் தேதி ஹாலிடே இன் பணியாளர்கள், இம்மூவருக்கும் உணவு விடுதி பணியாட்க ளை போல மாறுவேடம் அணிய உதவியுள்ளனர். மாறுவேடம் அணிந்தபடியே இம்மூவரும் தங்கள் பெற்றோருக்கு உணவு பரிமாற தொடங்கியுள்ளனர். முதலில் அலெக்ஸ் தன்னுடைய தந்தைக்கு உணவு பரிமாற சென்றுள்ளார். அப்போது தந்தை,” இந்த பணியாளரை பார்க்கும்போது என் மகன் அலெக்ஸை போல இருக்கின்றது” என்று கூறியுள்ளார். இருப்பினும், அலெக்ஸ் உண்மையை கூறாமல் ஆங்கிலத்திலேயே பேசி, ‘குவே தோ’ என்னும் உணவு வகையை அவரே சமைத்து கொள்ளும்படி கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் காய் லீயை சந்தித்த தந்தை, இந்த பணியாளரின் உயரமும், கண்களும் நெற்றியும் கூட தனது மகளை போன்றே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பின்னர் 3 சகோதர சகோதரிகளும் தங்கள் தாயாருக்கு உணவு பரிமாற தொடங்கியுள்ளனர். உடனடியாக இவர்கள் மூவரையும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்றாலும், மேஜையை விட்டு சற்று தூரம் சென்ற பிறகு அவர்கள் மூவரும் எவ்வாறு தங்கள் பிள்ளைகளைப் போல உருவ ஒற்றுமை மற்றும் குரல் ஒற்றுமை உடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பிள்ளைகள் மூவரும் பெற்றோருக்கு அருகில் வந்து தங்களுடைய மாஸ்க்கை கழற்றி, முகத்தை காட்டியுள்ளனர். பெற்றோர் அதிர்ச்சி வெள்ளத்தில் மூழ்கி சந்தோஷத்தில் செய்வதறியாது திகைத்தனர். இதைப்பற்றி காய் ஈ குறிப்பிடுகையில், தாம் ஜோஹார் பஹ்ரு சிட்டி சென்டரில் உள்ள ஹாலிடே இன் உணவகத்திற்கு நன்றிக்கடன்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் பெற்றோரை நல்ல உடல் நலத்துடன் மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மனங்களை நெகிழ வைக்கும் இந்த வீடியோ காட்சி சுமார் பத்தாயிரம் முறை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்ஸை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts