சிங்கப்பூரில் சென்ற வாரயிறுதியில் சிசில் தெருவில் நடந்த சண்டையை அடுத்து அந்த கலவரத்தில் ஈடுபட்டதற்காக ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் நேற்று செவ்வாய்கிழமை (மே 10) தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை சுமார் 1.40 மணியளவில் சிங்கப்பூரில் பிரபலமான நைட்ஸ்பாட் செர்ரி டிஸ்கோத்தேக் பகுதியில் இருந்து உதவிக்கான அழைப்பை பெற்றதாகவும், பலர் அங்கு குழுமி சண்டையிட்டுக்கொள்வதாகவும் தகவல் கிடைத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் 20 மற்றும் 59 வயதுடையவர்கள் என்றும், மேலும் இந்த சம்பவத்தில் 21 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்கள் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
எஞ்சிய அனைவரையும் கைது செய்யும் பணி நடந்து வருவதாகவும், விசாரணைகள் தொடர்கின்றன என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் குடிபோதையில் இருந்த ஒரு குழுவினர், குறிப்பிட்ட அந்த இரவு விடுதிக்குள் நுழைய மறுக்கப்பட்டதை அடுத்து பிரபல Cherry Discotheque’s நுழைவாயிலில் வந்து சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த மே 6, 2022 வெள்ளிக்கிழமை இரவு, Cherry Discotheque’s நுழைவாயியின் வெளியே வரிசையில் நின்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. ஒரு மதர்ஷிப் வாசகர் வெளியிட்ட கருத்துகளின்படி, ஒரு குழுவினருக்கு உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பின்னர் சிறிது நேரம் கழித்து சம்பவத்தன்று இரவு அந்த Discothequeன் பாதுகாப்பு அதிகாரிகளை தாக்க மீண்டும் கவுண்டருக்கு வந்ததாகவும் அவர் பகிர்ந்து கொண்டார். முகநூல் பக்கம் ஒன்றில் வெளியான அந்த சண்டையின் வீடியோவில், செர்ரி டிஸ்கோதேக்கின் பாதுகாப்பு மற்றும் கவுண்டர் ஊழியர்களை அந்த ஆண்களின் குழு தாக்குவதைக் காணமுடிந்தது.