TamilSaaga

சிங்கப்பூரின் “சென்னை ட்ரேடிங் சூப்பர்மார்ட்” – தடைகள் பல தாண்டி சாதித்த தமிழன் ராமமூர்த்தி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலப்பெருமழையில் பிறந்தவர். ஆரம்ப கல்வியை மேலப்பெருமழையில் முடித்து, பின்பு 10ம் வகுப்பு வரை அருகில் உள்ள இடும்பாவனத்தில் முடித்தார். உயர்நிலை கல்வியை முத்துப்பேட்டையிலும், தனது கல்லூரி படிப்பினை அபிராம பட்டினம், காதர்மொகைதீன் கல்லூரியிலும் படித்தார். தனது முதுநிலை படிப்பினை பூண்டி புஷ்பம் கல்லூரியிலும், பட்டய படிப்பினை மீண்டும் அதிராம்பட்டினம், காதர்மொகைதீன் கல்லூரியில் முடித்தார்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் Happy Fish நீச்சல் பள்ளிக்கு 6500 வெள்ளி அபராதம்

ஊர் போற்றும் குடும்பத்தில் பிறந்தாலும், தனது சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற உத்வேகம் இவரை, தனது படிப்பிற்கும் செய்ய போகும் வேலைக்கும் சம்மந்தமே இல்லாமல் இருக்கும் கட்டிட வேலைக்காக தனது தந்தையின் எதிர்ப்பை மீறி சிங்கப்பூர் வருகிறார். தனது கடின உழைப்பால் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனையாலும், இன்று இவரை வெற்றி தமிழராய் உருவாக்கி இருக்கிறது.

சிங்கப்பூரில் சென்னை ட்ரேடிங் சூப்பர்மார்ட் என்று சொன்னால் தெரியாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு, வளர்ந்து உயர்ந்து இருக்கிறார். சிங்கப்பூரில் 7 கிளைகள், ஆஸ்திரேலியாவில் ஒரு கிளை என வெற்றி நடை போடுகிறார, திரு. ராமமூர்த்தி அவர்கள்.                                                                                                                       

“என் பெயர் ராமமூர்த்தி.அப்பா பெயர் வைரப்ப தேவர். அம்மா பெயர் சரோஜா. பிறந்தது மேலப்பெருமழைங்கிற சிறிய கிராமம். தற்போது திருவாரூர் மாவட்டத்துல இருக்கு. பள்ளி பருவம்ன்னு சொன்னா, 1-5ம் வகுப்பு வரை உள்ளூரிலேயே மேலப்பெருமழையிலேயே தான் படிச்சது. அடுத்தது 6-10ம் வகுப்பு வரை இடும்பாவனம். +2 முத்துப்பேட்டை பாய்ஸ் ஸ்கூல்ல தான் படிச்சேன்.BSC கணிதம் அதிராம்பட்டினம், MSC கணிதம் பூண்டி கல்லூரியிலேயும் படிச்சேன். மறுபடியும் Post Gratuade மறுபடியும் அபிராம பட்டினத்தில பண்ணேன். படிச்சது எல்லாமே அரசு பள்ளியில தான் . இப்போ மாதிரி சிபிஎஸ்சி பள்ளிலாம் இல்லை. அப்பலாம் மாநகராட்சி, நகராட்சி பள்ளிகள்ல தான் படிச்சது. எல்லாமே அரசாங்க பள்ளிகள் தான்.

கல்லூரி வாழ்கையை பத்தி சொல்லணும்னா நமக்கு இன்ஸ்பிரேசன்னு சொல்லணும்னா HOD திரு. ஷாகுல் அமீத் தான். பாசிஸ்டிவா , ரொம்ப பிரண்ட்லியா இருப்பாங்க. எங்களுக்குள்ள உறவு மாணவர் – ஆசிரியரா இருக்காது. நண்பர் மாதிரி தான் பழகுவாங்க. கிராமத்துல உள்ள கபடி டீம்ல விளையாடுவேன். அதை பாத்து என்னை அழைச்சிட்டு போயி, கல்லூி டீமில் சேர்த்து விட்டாங்க. திறமையை வச்சிக்கிட்டு நீ ஏன் வெளியே சொல்லாம இருக்கே? வெளியே வராம இருக்கேன்னு கேட்டாங்க.

முதுநிலை படிப்பு படிச்சி முடிச்சதும் நான் சிங்கப்பூர் வந்துட்டேன். அப்பாவுக்கு பெரிய அளவுல உடன்பாடு இல்லை. படிச்சிட்டு ஏன் வெளிநாடு போய் சம்பாதிக்கணும். இங்கேயே வேலை பாருன்னு சொன்னாங்க. விவசாயம் இருக்கு. அதை பாத்துக்கோன்னு சொன்னாங்க. வெளிநாடு போக அப்பா சம்மதிக்கலை.

அப்பா சம்மதம் இல்லமா தான் சிங்கப்பூர் வந்தேன். அப்பா ஏன் போக வேண்டான்னு சொன்னாங்கன்னா, கட்டிட வேலைக்காக தான் இங்கே வந்தேன். அதுக்கு எந்த படிப்பும் தேவையில்லை. அதனால அப்பாவுக்கு அதில உடன்பாடே இல்லை. எல்லா படிச்சிட்டு, இந்த வேலைக்கு போறதான்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. நானும் அப்பா சொல்லை கேட்காம வந்துட்டோன்னு, வேலை கஷ்டமா இருந்தாலும் எதுவும் சொல்லலை.

படிச்சி முடிச்சிட்டு உடனே வந்துட்டேன். எந்த முன் அனுபவமும் இல்லை. வந்த இடத்திலேயும் அதிகம் வேலை. அதனால அதிகம் மன உளைச்சலா இருந்துச்சி. அதிக அவமானங்கள். 7 -8 வது படிச்சங்க சூப்பர்வைசரா இருப்பாங்க. ஏற்கனவே பல வருஷங்க அங்க வேலை பாத்தங்க தான், எனக்கு வேலை சொல்லுங்க. அந்த மாதிரி விசயங்கல நான் பாசிட்டிவா தான் எடுத்துக்கிட்டேன். அது ஒரு சைனீஷ் கம்பெனி.

கொஞ்ச நாள் கழிச்சு நான் படிச்சவன்றது அவங்களுக்கு தெரிஞ்சுது. அதனால் கட்டிட வேலை ஆபிஸ் வேலையா மாறிச்சு. அப்ப அவங்க சொன்ன வேலையை செஞ்சத பாத்து கம்பெனி ஓனரு உனக்குல நிறைய திறமை இருக்குன்னு சொன்னாங்க. நல்லா ஊக்குவிச்சாங்க. 1993 மே மாசம் சிங்கப்பூர் வந்தேன். 1995ல எம்பிளாய்மெண்ட் பாஸ் கேட்டேன். எந்த மறுப்பும் சொல்லாம ஓனரே உதவி செய்சாரு. 40 நாளில் அப்ரூப் ஆச்சு. 1996ல நிரந்தர சிங்கப்பூர்காரனா மாறினேன். 98ல சிங்கப்பூர் குடியுரிமையும் கிடைச்சது. எல்லாமே இறைவன் அருளால கிடைச்சிது. சிங்கப்பூர்ல PR இல்லனா சிட்டிசனா ஆகிட்டா எங்கே வேணா சுத்தலாம். எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் முதலாளி நமக்கு நிறைய உதவி செய்சிருக்காங்கன்னு, வேற எங்கயும் வேலைக்கு போகாம அவர் கிட்டயே தான் நான் வேலை பாத்தேன்.

1999ல தான் எனக்கு திருமணம் ஆச்சு. என்னோட கல்யாணம் அரேன்ஞ்டு மேரேஜ். அவங்க வீட்ல பையன் தேடிட்டு இருந்தாங்க. எங்க வீட்ல கல்யாண பொண்ணு தேடிட்டு இருந்தாங்க. எங்க சொந்தகாரங்க மூலம் தெரிய வந்து, பொண்ணை பாத்துட்டு வந்தோம். எல்லாம் பேசி கல்யாணம் முடிவாச்சி. ஆனா அப்பா நம்ம ஊர் பொண்ணு பாத்துக்கலாம். சிங்கப்பூர் பொண்ணு வேண்டாம்ன்னு சொன்னாங்க. மறுபடியும் அப்பா பேச்சை மீற வேண்டிய சூழ்நிலை. ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் தான். மனசுக்கு பிடிச்சது பெண்ணையும். ஆனா அப்பா ஏத்துக்காதது கஷ்டமா இருந்துச்சு. அவங்க அப்பா, அம்மாவ, அண்ணியை கூட்டிட்டு போய் பேசி அப்பா, அம்மா முன்னிலையில தான் கல்யாணம் பண்ணேன். அடுத்த ஆண்டு முதல் குழந்தை ஷாமினி பிறந்தா. 3 பெண் குழந்தைங்க. 1 பையன். 4 பிள்ளைங்க எனக்கு.

1993 -2005 வரை  தொடர்ந்து அதே நிறுவனத்துல வேலை பாத்தேன். 2005ல பெரிய மன கசப்பு வந்துச்சு. இவ்ளோ வருஷம் வேலை பாத்து உழைப்புக்கு ஏத்த அங்கீகாரம் கிடைக்கலன்னு தோணுச்சு. முதல்ல இங்க வேலை பார்க்க கூடாதுன்னு தான் எண்ணம் வந்துச்சு. விடிய விடிய தூக்கம் வரல. இனிமே யார் கிட்டயும் வேலை பாக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணேன்.

குழந்தைகளை வைச்சிட்டு பெருசாலாம் சேமிக்க முடியலை. கைல 17000 வெள்ளி தான் இருந்தது. மற்ற பொருளெல்லாம் சேர்த்தா 50000 வெள்ளி இருந்துச்சு. அப்பவும் சோர்ந்து போகலை. மனசுல வைராக்கியம் இருந்துச்சு எப்படியும் சொந்தமா தொழில் செய்யணும்னு.

நண்பர்கள், தெரிஞ்சவங்க எல்லார்கிட்டயும் முடிஞ்ச அளவு சின்ன சின்ன தொகையா ரெடி பண்ணேன். 2005ல தான் முதல் முதலா சென்னை டிரேடிங் & மார்ட் சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்சேன். லிட்டில் இந்தியான்னு அதிக இந்தியர்கள் கூடுற இடத்துல கடை ஆரம்பிச்சது, கடையோட பேரு மக்கள் கிட்ட சீக்கிரம் போய் சேர்ந்துச்சு.

ஆரம்பத்தில நிறைய நண்பர்கள் சப்போர்ட் தேவைப்பட்டுச்சு. நேரம், காலம் பாக்காமல் வேலை பார்க்க வேண்டி இருந்தது. ஒரே ஒரு ஆளு தான் வேலைக்கு போட்டிருந்தேன். அதனால அக்கவுண்ட்ஸ், டெலிவரின்னு எல்லாத்தையும் செய்தேன். 2006ல பக்கத்துல ஒரு ரெஸ்டாரண்ட் வந்துச்சு. அதையும் எடுத்தேன். அடுத்தடுத்த வருஷத்துல அடுத்தடுத்த Branch உருவாச்சு. ஆஸ்திரேலியாவில சிட்னில ஒரு Branch இருக்கு.

சிங்கப்பூர் வந்தது Accident ன்னு சொல்ல முடியாது. அது incident ன்னு தான் சொல்வேன். அப்பா தேவையானதை சம்பாதிச்சு வைச்சிட்டாங்க. இருக்க இடம், நிலம், தோப்பு எல்லாம் இருந்துச்சு. அக்கா, அண்ணாவுக்கு திருமணம் ஆகிடுச்சு. உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. அதனால தான் இங்கேயே இருன்னு அப்பா சொன்னாங்க. வேலை நான் வாங்கி தரேன். கல்யாணம் பண்ணிட்டு இங்கேயே இருன்னு தான் அப்பா சொன்னாங்க. படிச்சிருக்கோம் சொந்தமாக வேலை செய்யணும்னு தோணுச்சி.

சிங்கப்பூரில அண்ணன் பையன் தான் இருந்தாங்க. அவங்க சிங்கப்பூருல கட்டிட வேலை தான் பாத்துட்டு இருந்தாங்க. வேலைக்கு எடுக்கிறாங்கன்னு சொன்னதுக்கு அப்புறம் வர சொன்னாங்க. அப்புறம் தான் கிளம்பி வந்தேன்.

அப்புறம் வாழ்க்கையில பல மாற்றங்கள் வந்துச்சு. அம்மா சிங்கப்பூர் வந்துட்டு போயிருக்காங்க. ஆனா அப்பா கடைசி வரை வரல. அவங்க விருப்பத்துக்கு எதிரா சிங்கப்பூர் வந்ததால அப்பா வரல. நல்ல இடத்துக்கு வந்ததுக்கு அப்புறம் சொந்தக்காரங்க வந்து பாத்துட்டு அப்பாக்கிட்ட போய் சொல்றத கேட்டுட்டு, சிங்கப்பூர் வர மனது மாறி பாஸ்போட்டு எடுத்தாங்க. குழந்தைங்க மேல ரொம்ப பிரியம் அப்பாவுக்கு. நானும் நேர்ல வந்து கூட இருங்க ஒரு மாசமாவதுன்னு சொன்னேன். அந்த நேரத்துல உடம்பு முடியாத இருந்த அப்பா, 2 மாசத்துல இறந்துட்டாங்க. அப்போ அவங்களுக்கு 94 வயசு.

ஜெயிச்சு வந்த என்னை அப்பா வந்து நம்மளை பாக்கலைன்ற மன வருத்தம் இன்னைக்கும் இருக்கு. வாய்ப்பு இருக்கவங்க, முடிஞ்ச வரை குடும்பம் கூட நேரத்தை செலவு பண்ணுங்க. லேட்டா வருத்தப்பட்டு எந்த பிரஜோனமும் இல்லை” என்கிறார், ராமமூர்த்தி.

தான் வளர்ந்த பிறகு, தனது மண்ணையும், தம் உற்றார், உறவினர்களையும் மறக்காதவர், ராமமூர்த்தி. சென்னையில் ஏற்பட்ட வெள்ள சமயத்திலும், கஜா சமயத்திலும் இவரின் உதவும் கரங்கள் நீண்டன. இன்றும் இவரின் உதவிகள் தமிழகத்திலும், சிங்கப்பூரிலும் தமது வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டவர்கள் அதிகம்.

“ கஜா புயலின் போது சிங்கப்பூரில் இருந்து இங்கே வந்து, உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கியதாக தெரிவிக்கிறார்”, அவரது நண்பர் ரவி.

“ராமமூர்த்தி அப்பா பால் வியாபாரம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அவர் கூட சேர்ந்து வேலை பார்த்தவர். ரொம்ப சுட்டி என்கிறார்”, எதிர் வீட்டுக்காரர் ராமமூர்த்தி.

“ 40 பேரு கடையில வேலை பாக்குறேன். எல்லோர் கூடயும் நட்பா பழகுவாங்க. நாங்கல்லாம் அண்ணன்னு தான் கூப்பிடுவோம். குடும்பம் மாதிரி இருக்கோம். உதவும் தன்மை அவங்களுக்கு அதிகம். அவரை ரோல் மாடலா வைச்சி தான் நாங்க வரோம். சென்னை டிரேடிட் மார்ட்ன்னு சொன்ன சிங்கப்பூர்ல தெரியாத ஆளு இல்லை. இது தனி மனுஷனோட முயற்சிக்கு கிடைச்ச வெற்றி என்கிறார்கள், அவரது ஊழியர்கள்.

“ அப்போ பார்த்த ராமமூர்த்திக்கும், இப்போ பார்க்கிற ராமமூர்த்திக்கும் அபார வளர்ச்சி இருக்கு. எவ்வளவு உயர்ந்தும் பணிவு குறையவில்லை. சிங்கப்பூரில் எம்பியாகணும்ன்னு விரும்புறேன்னு சொல்கிறார், முன்னாள் பேராசிரியர் சாகுல் அமீது.

“ பிசினஸ்க்கு முக்கியமான விசயம் தன்னம்பிக்கை. அது அவங்ககிட்ட நிறைய இருக்கு. எல்லாத்தையும் சமாளிச்சு வந்துடுவாங்க. பிள்ளைக்கு கேட்கிறத வாங்கி தந்துடுவாங்க” என நெகிழ்கிறார், ராமமூர்த்தியின் மனைவி கலாவதி.

“குடும்பத்தோடு அப்பா நேரம் செலவு பண்ணுவாங்க. அதே நேரம் வருஷத்துக்கு ஒரு முறையாவது வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போவாங்க. ரொம்ப ஜாலி டைப் அப்பா. எங்களோட ரோல் மாடல் அவங்க என மகிழ்ச்சியில் குதிக்கின்றனர்”, ராமமூர்த்தியின் பிள்ளைகள் ஷாமினி, ஈஷா, அஸ்வின்.

“ அவங்க பிள்ளைங்க மாதிரி தான் எங்களையும் நடத்துவாங்க. ரொம்ப பாசமா இருப்பாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு தான் முன்னுக்கு வந்திருக்காங்க. அதனால சித்தாப்பாவ ரொம்ப பிடிக்கும் என்கிறார், ராமமூர்த்தியின் அண்ணன் மகள் இலக்கிய ரோஜா.

“நானும் சிங்கப்பூர் கடையில தான் வேலை பார்த்தேன். சொந்தக்காரன்னு என்னை ஒரு மாதிரியும், மத்தவங்கள ஒரு மாதிரியும் நடத்தலை. எல்லாரையும் ஒரே மாதிரி தான் நடத்துனாங்க. மாமாவும் வேலை ஆள் மாதிரி தான் வேலை பார்ப்பாங்க என்கிறார்”, ராமமூர்த்தியின் உறவினர் அருண்.

“கடைசி பையன்னு ரொம்ப செல்லம். நல்ல குணமுள்ளவன். இங்கயும் ரொம்ப கஷ்டப்பட்டான். சிங்கப்பூருல போய் சிரமப்பட்டு, இன்னைக்கு நல்லாருக்கிறது சந்தோஷமா இருக்கு என்கிறார், ராமமூர்த்தியின் அம்மா சரோஜா

“நாங்க மொத்தம் 6 பேரு. மூத்தவங்க 2 பேரு தவறிட்டாங்க. நானு, அண்ணா, 2 சகோதரிகள்ன்னு 4 பேர் தான் இருக்கோம். அவங்க எல்லாரும் ஊருல தான் இருக்காங்க. அக்கா பையன் ரொம்ப உதவியா இருக்காங்க. ஆஸ்திரேலியா கடையை மூத்த அக்கா பையன் தான் பாத்துக்கிறாங்க. “புதுசா தொழில் தொடங்குறவங்க, முழுசா தெரிஞ்சா செய்ங்க. பிறகு பாத்துக்கலாம்ன்னு நினைக்க முடியாது. பின்னாடி எதுவும் வர முடியாது. 8 -5 மாதிரி இருக்க முடியாது. தொழிலில் முழுசா இறங்கும் போது எந்த எண்டெர்டெயின்மெண்ட்டும் இருக்காது. குடும்பத்தோட கூட பெருசா நேரம் செலவு செய்ய முடியாது. அதெல்லாம் தெரிஞ்சி தான் வரணும். அப்படி செஞ்சா எல்லா தொழிலும் நல்லா வரும்” என ஆணித்தனமாக கூறுகிறார், வெற்றித்தமிழன் ராமமூர்த்தி

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Image and Content Source : Puthuyugam Television

Related posts