TamilSaaga

24 மணி நேரத்தில் 2 மடங்கு அதிகரித்த தொற்று.. 2 ஆண்டுகளுக்கு பிறகு கனவுகளுடன் சிங்கை செல்ல காத்திருக்கும் ஊழியர்கள்.. புதிதாக விசா பெற்றவர்களுக்கு சிக்கலா? – Exclusive Report

எல்லாம் கொஞ்சம் நல்லபடியாக சென்றுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென அனைவரது தலையிலும் இடியாய் வந்திறங்கியுள்ளது ஒரு முக்கிய அப்டேட்.

ஆம்! சிங்கப்பூரில் நேற்று (ஜூன்.28) ஒரே நாளில் மட்டும் 11,504 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது திங்களன்று பதிவான 5,309 பாதிப்புகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும். அதாவது 24 மணி நேரத்தில் 2 மடங்குக்கும் மேல் தொற்று பரவியுள்ளது.

இதனை சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் புதிய BA.4 மற்றும் BA.5 Omicron துணை வகைகளால் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் அதிகரித்து வந்தாலும், பெரிதாக கவலை கொள்ளத் தேவையில்லை என்றே அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

குறிப்பாக, துணைப்பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று முன்தினம் (ஜூன்.27) செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதிய BA.4 மற்றும் BA.5 Omicron துணை வகைகளால் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும், பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை இப்போதைக்கு கடுமையாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேசமயம், இதை புறந்தள்ளவும் முடியாது” என்று கூறியிருந்தார்.

அவர் பேசிய 24 மணி நேரத்திற்குள், தொற்று பரவல் இரட்டிப்பாகியுள்ளது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். வரும் நாட்களில் தொற்று பரவல் மேலும் அதிகரித்தால் என்னென்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க – ஆலமரமாய் பல ஊழியர்களுக்கு கைக்கொடுத்த வீரையா… வெளிநாட்டு ஊழியர்கள் புடை சூழ மண்ணுக்குள் விடைபெற்றார் – சேர்த்து வைத்த புண்ணியங்களே அவர் பிள்ளைகளுக்கு போதும்!

இந்த சூழலில், சிங்கப்பூரில் வேலை கிடைத்து அடுத்தடுத்த நாட்களில் சிங்கை வந்திறங்க தயாராக உள்ள ஊழியர்கள், மிக வேகமாக அதிகரிக்கும் தொற்று பரவலால் கலக்கத்தில் உள்ளனர். கடந்த 2 வருடங்களாக உலகமே முடங்கியிருந்த நிலையில், இப்போதுதான் எல்லாம் கொஞ்சம் சுமூகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. சிங்கப்பூரும் தனது எல்லைகளை எல்லா நாட்டு ஊழியர்களுக்கும் திறந்துவிட்டுள்ள நிலையில், மீண்டும் தொற்று அதிகரிப்பதால், சிங்கை அரசு என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று கூறப்படுவதால் அனைவருமே கலக்கத்தில் உள்ளனர்.

இதுகுறித்து நாம் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். அதில் அவர், “நேற்று (ஜூன்.28) தான் இவ்வளவு அதிகமான பாதிப்பு பதிவாகியுள்ளது. நாங்கள் தொடர்ந்து இதனை கண்காணித்து வருகிறோம். வரும் நாட்களில் தொற்று பரவல் விகிதம் எப்படி உள்ளது என்பதை பொறுத்தே மற்ற நடிவடிக்கைகள் எடுக்கப்படும். மற்றபடி, துணை பிரதமர் சொன்னது போல், பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை இப்போதைக்கு கடுமையாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அது வரும் நாட்களில் பதிவாகும் தொற்றுகள் எண்ணிக்கையை பொறுத்தே முடிவு செய்யப்படும்” என்றார்.

தொடர்ந்து தமிழ் சாகா சார்பாக, சிங்கப்பூர் மனித வளத்துறை அமைச்சக அதிகாரி ஒருவரிடம் பேசுகையில் அவர், “தொற்று அதிகரிப்பு பற்றி இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. இந்தியா உட்பட நாடுகளில் இருந்து புதிய விசா பெற்று ஊழியர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் வருகைக்கு எந்த தடையும் கிடையாது. திட்டமிட்ட தேதியில் அவர்கள் சிங்கப்பூர் வரலாம். எல்லாம் வழக்கமான நடைமுறை படியே பின்பற்றப்படுகிறது. வேறு எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியாது” என்றார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts