TamilSaaga

சிங்கப்பூர் விமானம் அவசரமாகத் திரும்பியது: தொழில்நுட்பக் கோளாறு காரணம் – பயணிகள் அதிர்ச்சி

சீனாவின் ஸி’அன் நகரிலிருந்து பிப்ரவரி 23ஆம் தேதி சிங்கப்பூருக்குப் புறப்பட்ட ஸ்கூட் விமானம், தொழில்நுட்பக் கோளாறுகளின் காரணமாக மீண்டும் ஸி’அன் நகருக்குத் திரும்பியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தடங்கலால் பயணிகள் மற்றும் விமான நிலைய நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டதோடு, விமானம் தகுந்த பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

பயணிகள் சிலர் விமானம் புறப்பட்டபோது தீப்பொறிகளைக் கண்டதாக தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஸ்கூட் நிறுவனம், “விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடிக்கவில்லை” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஸி’அன் ஸியன்யாங் அனைத்துலக விமான நிலையத்தில் அவசரகாலச் சேவைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்தது.

ஸி’அன் நகரிலிருந்து அதிகாலை 1.33 மணிக்குப் புறப்பட்ட விமானம் 1.56 மணிக்குப் பாதுகாப்பாகத் தரையிறங்கிய பிறகு, பயணிகளும் விமான ஊழியர்களும் வழக்கமாக வெளியேறுவதுபோல் அதிலிருந்து வெளியேறினர்.

விமான மேற்கூரையில் சிவப்பு வண்ணத்தில் ஏதோ மின்னுவதைக் கண்டபோது நிலைமை சரியில்லை என்று உணர்ந்ததாகக் கூறிய 28 வயது திருவாட்டி இங், பயணிகள் விமானச் சிப்பந்தியிடம் அதுகுறித்துக் கூறினார். சிறிது நேரத்தில் விமானம் புறப்பட்ட இடத்துக்கே திரும்புவதாக விமானி அறிவித்தார். பொறியாளர்கள் கோளாற்றைச் சரிசெய்யக் கூடுதல் நேரம் தேவைப்படுவதாகக் கூறியதையடுத்து அந்த விமானத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டதாக ஸ்கூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்கூட் நிறுவனம், அனைத்துப் பயணிகளுக்கும் தேவையான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் இன்று (24 பிப்ரவரி) சிங்கப்பூருக்குத் திரும்புவதற்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்பட்ட தடங்கலுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் என்று Scoot நிறுவனம் தெரிவித்தது. பயணிகளின் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு எப்போதும் மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படும், என்று ஸ்கூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts