அண்டை நாடான இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கான RT-PCR சோதனை காலத்தின் அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நமது தமிழ் சாகா சிங்கப்பூருக்கு நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்தி கிடைத்துள்ளது. இந்த பெருந்தொற்று காலத்தில் விமான பயணம் என்பது மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. பிற நாடுகளில் வசிக்கும் மக்கள் அடுத்த நாட்டிற்கு அல்லது தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப விமான சேவைகளை அணுகும் நிலையில் RT PCR என்று அழைக்கப்படும் விரைவு பெருந்தொற்று சோதனையை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக இந்த நோய் பரவல் காரணமாக, இந்த RT-PCR சோதனையை விமான பயணத்திற்கு ஒருசில நாட்களுக்குள் எடுக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அந்தந்த நாட்டு அரசுகள் கூறிவருகிறது. இந்நிலையில் தான் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் இந்த சோதனையை அவர்களின் விமான பயண நேரத்திற்கு 74 மணி நேரத்திற்குள் எடுத்திருக்க வேண்டும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முன்னர் தெரிவித்திருந்தது.
இது குறித்து முழு தகவல்களையும் தனது இணையதளத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அந்த 72 மணிநேரம் என்ற கால அளவு தற்போது 48 மணிநேரமாக மாற்றப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்ப்ரெஸ் தெரிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்த தகவலை அந்த நிறுவனம் தனது இணையத்தில் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது. இந்த தீடீர் நேர மாற்றத்தால் பல மக்கள் திருச்சி போன்ற பல இந்திய விமான நிலையங்களில் செய்வதறியாது தவித்து வருகின்றனர் எனது தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நேர மாற்றத்தால் ஏற்கனவே பணத்தை செலவு செய்து RT-PCR சோதனை மேற்கொண்டவர்கள் மீண்டும் அதே சோதனையை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். மேலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் வெகு சில பேர் குறுகிய நேரத்தில் உங்களுக்கு சோதனை செய்து சான்றிதழ் தருகிறோம் என்று கூறி அதிக தொகையை பயணிகளுடன் பெறுவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அதிக நேரம் மற்றும் பணத்தை செலவு செய்து சிங்கப்பூர் வர விமான நிலையம் வந்தவர்கள் இதனால் பெரிய அளவில் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே புக் செய்த தேதியில் பயணம் செய்யமுடியாமல், ஏற்கனவே எடுத்த RTPCR சோதனை செல்லுபடியாகாமல் மக்கள் தவிக்கின்ற நிலைக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற தகவல்களை விமான சேவை நிறுவனங்கள் உடனடியாக தங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் பயணிகளுக்கு சிறந்த பல நன்மைகளை அது அளிக்கும் என்பது பலரின் கருத்து. உரிய நேரத்தில் தங்கள் தாயகத்திற்கு திரும்ப முடியாமல் மக்களை இந்த பெருந்தொற்று பெரிய அளவில் வாட்டிவதைக்கின்றது என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை.
தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான கவுண்டர்களில் 72 மணி நேரம் என்ற அளவில் PCR சோதனைகளை மேற்கொண்டு சான்றிதல்களோடு நிற்கும் பயணிகள் மீண்டும் இன்னொரு முறை அதே சோதனையை கட்டணம் செலுத்தி எடுக்கவேண்டிய நிலையில் உள்ளனர். 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட சோதனை முடிவுகளே தற்போது சிங்கப்பூர் வர ஏற்றுக்கொள்ளப்படுகிறது. விரைந்து இதற்கு விமான சேவை நிறுவனம் சிறந்த தீர்வை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியியல் சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள ஒரு இறைச்சி கூடத்தில் இந்த நோய் வெறும் ஒற்றை தொற்றாக உருவெடுத்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் கடந்து நமது நாட்டுக்கு இந்த வைரஸ் பரவாது என்று நினைத்த நமது எண்ணங்கள் தவிடுபொடியானது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது, இன்னும் நம்மால் நமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை. 100 வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற ஒரு பேரழிவு வருவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் வானை கிழித்துக்கொண்டு பிற கண்டங்களை ஆய்வு செய்யும் இந்த டிஜிட்டல் உலகிலும் இதுபோன்ற ஒரு வைரஸ் கிருமியை அளிக்க இத்தனை ஆண்டுகள் தேவைப்படும் நேரத்தில் இயற்கையை வெல்ல மனிதனால் எப்போதும் முடியாது என்ற பதிலே மிஞ்சுகிறது.