சிங்கப்பூரில் குழைந்தைகள் மத்தியில் பிரபலமான சாக்லேட் தான் Kinder Surprise சாக்லேட்கள், இந்நிலையில் சிங்கப்பூர் உணவு ஏஜென்சி (SFA) வெளியிட்ட அறிக்கையில் Kinder Surprise சாக்லேட் பாக்கெட்களின் சில தொகுப்புகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. அந்த குறிப்பிட்ட சாக்லேட்களை உட்கொள்வதன் மூலம் Salmonella நோய் பாதிக்க வாய்ப்பிருப்பதாகவும் SFA தெரிவித்துள்ளது.
Salmonella என்பது ஒரு நோய்க்கிருமி பாக்டீரியமாகும், இது காய்ச்சல், வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உணவு மூலம் பரவும் நோய்களை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 6) SFA வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், அயர்லாந்தின் உணவு பாதுகாப்பு ஆணையம் பெல்ஜியத்தில் இருந்து செல்லும் Kinder Surprise சாக்லேட்டின் சில தொகுப்புகளை திரும்பப் பெறுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட அந்த தயாரிப்புகளில் சில பாக்கெட்கள் சிங்கப்பூருக்கும் இறக்குமதி செய்யப்பட்டதால், தயாரிப்புகளை திரும்பப் பெறுமாறு இறக்குமதியாளரான ரெட்மார்ட்டை SFA அறிவுறுத்தியுள்ளது. ஜூலை 11, 2022 மற்றும் அக்டோபர் 7, 2022க்கு இடைப்பட்ட தேதிக்கு Expiry தேதி கொண்ட Kinder Surprise Egg சாக்லேட் பாக்கெட்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தயாரிப்புகளை வாங்கிய நுகர்வோர் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், என்று SFA தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட தயாரிப்புகளை உட்கொண்டவர்கள் மற்றும் அவர்களின் உடல்நலம் குறித்து கவலை கொண்டவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று SFA மேலும் கூறியது. குழந்தைகள் அதிகம் இந்த வகை சாக்லேட்களை விரும்புவதால் பெற்றோர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.