TamilSaaga

சிங்கப்பூரில் செட்டிலான சென்னை பெண்ணுடன் “திருமண விளையாட்டு”.. புதுக்கோட்டை இளைஞரின் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் “106 ஆண்டுகள்” சிறை

சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்ணை ஃபேஸ்புக் மூலம் பழகி, ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து, பதிவுத் திருமணம் செய்து, இப்போது அவரையும் ஏமாற்றி, 3வது திருமணம் செய்ய முயன்ற புதுக்கோட்டை இளைஞரின் ஒட்டுமொத்த குடும்பத்தாருக்கும் சேர்த்து 106 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வசந்தபுரி நகரைச் சேர்ந்தவர் சோலைகணேசன். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்து ஆகிவிட்டது. இந்த நிலையில், சென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதியை பூர்வீகமாகக் கொண்டு, சிங்கப்பூரில் PR பெற்று அங்கேயே Settle-ஆகி வசித்துவரும் ஆரோக்கிய மேரி என்ற‌ ஆக்னஸ் சங்கீதா என்பவருடன் சோலைகணேசனுக்கு ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தனக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனதை மறைத்த சோலைகணேசன், ஆரோக்கிய மேரியை காதலிப்பதாக கூறியிருக்கிறார். இதனை நம்பிய மேரியும் காதலுக்கு ஒப்புக் கொள்ள, கடந்த 2010ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளனர்.

இந்த கல்யாணத்துக்கு சோலைகணேசன் வரதட்சணையாக பெற்ற தொகை மட்டும் 72 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய். அதுமட்டுமின்றி, மனைவியின் மூலம் தனது குடும்பத்தையே சிங்கப்பூர் அழைத்துச் சென்று கொண்டாட்டமாக இருந்துள்ளார். இந்த சூழலில் தான், சோலை ராஜனும் அவரது குடும்பத்தினரும் மேலும் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, கூடுதல் வரதட்சனை கேட்டதுமில்லாமல், குடும்பத்தினர் ஒன்றுகூடி ஆரோக்கியமேரிக்கு தெரியாமல் சோலைகணேசனுக்கு புதுக்கோட்டையில் 3வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்துள்ளனர். ஒட்டுமொத்த குடும்பமும் இதை செய்திருக்கிறது.

மேலும் படிக்க – உயிரிழந்து 19 நாட்கள் கழித்து… வெளிநாட்டு ஊழியர் பாலசுப்பிரமணியன் உடல் தகனம்.. மருத்துவமனை நிர்வாகத்திடம் 3 வாரமாக நடந்த ‘பேரம்’ – காலக்கொடுமை!

கணவனுக்கு இன்னொரு திருமணம் செய்ய ஏற்பாடு நடப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஆரோக்கியமேரி, கடந்த 2018ம் ஆண்டு புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் சோலைகணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்தார். விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் FIR பதிவு செய்து சோலைகணேசனை கைது செய்தனர். இந்த வழக்கு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்யா குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதாக தீர்ப்பளித்தார். திருமணமானதை மறைத்து ஆரோக்கியமேரியை பதிவு திருமணம் செய்துகொண்டு அவரை ஏமாற்றி மற்றொரு திருமணம் செய்ய முயன்ற சோலைகணேசனுக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2.60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் அவரது தாய் ராஜம்மாளுக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1.90 லட்சம் ரூபாய் அபராதமும், அவரது சகோதரி கமலஜோதிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1.50 லட்சம் ரூபாய் அபராதமும் , அவரது சகோதரர் முருகேசனுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1.60 லட்சம் அபராதமும், அவரது சித்தப்பா நாராயணசாமிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1.90 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து குற்றவாளிகள் அனைவரும் காவல்துறையினர் பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து கொண்டே தன்னை ஏமாற்றிய சோலை கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒட்டுமொத்த பேரையும் சிறைக்கு அனுப்பியுள்ளார் ஆரோக்கிய மேரி.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts