TamilSaaga

“என் அப்பா நீங்க தானா?” – வெளிநாட்டில் வேலை பார்க்கும் அப்பாக்கள் அனுபவிக்கும் சாபம் இது

ஒரு மகன் அவனது தந்தைக்கு ஆற்றும்உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல்எனும் சொல் என்றார் அய்யன் வள்ளுவர். அதாவது இந்த பிள்ளையை பெற்று வளர்த்து இன்று ஊர்போற்றும் அளவிற்கு வளர்த்துள்ளார் என்றால் இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ என்று விளக்குகிறார் வள்ளுவர். குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சந்ததியின் வாழ்க்கை. ஒரு குழந்தைக்கு உயிர்கொடுத்து ரத்தத்தை உணவாக்குவது தாய் என்றால் அறிவூட்டி இந்த உலகை அறிமுகப்படுத்துவது ஒரு தந்தை தான்.

தாயின் பாசமும் தந்தையின் கண்டிப்பும் நிச்சயம் ஒரு குழந்தையை பார் போற்றும் மனிதனாக வளர்க்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த பாக்கியத்தை உலகில் உள்ள தந்தைகளும் அனுபவிக்கும்போது ஒரு சில தந்தைகளுக்கு அந்த பாக்கியம் கிடைப்பதில்லை என்று தான் கூறவேண்டும். ஆம் அந்த தந்தைகள் தான் வெளிநாட்டில் வேலைபார்க்கும் தந்தைகள். திருமணம் முடிந்த சில மாதங்களில் வெளிநாட்டு வாழ்க்கை என்று கணவன் புறப்பட அந்த மணமகள் தாயாகிறாள். குழந்தை பிறக்கிறது, தந்தை முகத்தை செல் போனில் பார்த்து தான் வளர்கின்றது. அந்த பிஞ்சு உடலை கையில் தாங்கி உச்சிமுகர்ந்து முத்தமிட அந்த வெளிநாட்டு தந்தையால் முடியவில்லை.

ஏதோ இந்த காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால் பிள்ளைகளுடன் சில மணி நேரங்கள் வீடியோ கால் மூலம் பேசுகின்றனர் இன்றைய அப்பாக்கள். ஆனால் அன்றைய காலகட்டத்தை நினைத்துப்பாருங்கள், தொலைபேசியில் பேசக்கூட யோசித்த காலமது. வெளிநாட்டுக்கு போன் செய்வதென்மனது அவ்வளவு எளிய காரியமல்ல. அளவாக பேசி குடும்ப நலனை விசாரித்து விரைவாக பேசிமுடிக்க வேண்டும். ஆகவே இன்றைய சூழலில் தொழில்நுட்பம் இந்த வகை தந்தைக்கு ஒரு வரம் என்று தான் சொல்லவேண்டும். இதெல்லாம் படத்தில் தான் நடக்கும் என்று நீங்கள் நினைத்தால் தாயகம் விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் லட்சக்கணக்கான தந்தைகளை கேட்டுப்பாருங்கள் அவர்கள் சொல்வார்கள் அந்த வலியை.

மேலும் படிக்க – உயிரிழந்து 19 நாட்கள் கழித்து… வெளிநாட்டு ஊழியர் பாலசுப்பிரமணியன் உடல் தகனம்.. மருத்துவமனை நிர்வாகத்திடம் 3 வாரமாக நடந்த ‘பேரம்’ – காலக்கொடுமை!

ஒரு தந்தைக்கு குழந்தை என்பது தான் உலகம், அவர்கள் வெளிநாட்டில் பாடுபட்டு உழைப்பது எல்லாம் அந்த குழந்தையின் எதிர்காலம் சிறக்கத்தான். ஆனால் அந்த பிஞ்சுகளின் பாதம் தொடாமல், பஞ்சு போன்ற உடலை கட்டியணைக்காமல், கள்ளம்கபடம் இல்லாத சிரிப்பை நேரில் ரசிக்காமல், அந்த சிசு பேசும் முதல் மழலையை நேரில் கேட்டு ரசிக்காமல், வாழ்க்கையை உலகின் எங்கோ ஒரு மூலையில் கையில் அலைபேசியுடன் கழிக்கும் அந்த தந்தையின் வலி வார்த்தைகளில் அடங்காது.

பிறந்த குழந்தை 5 வயது 10 வயது எட்டும் வரை அவர்களை நேரில் கண்டு ரசிக்காமலே வாழக்கை நகரும் கதைகளும் இங்கு உண்டு. இத்தனை தியகங்களும் எப்படியும் இந்த பிறவியில் என்னால் இயன்றதை என் குடும்பத்திற்கு செய்துவிட வேண்டும் என்றே ஒரே குறிக்கோள் தான். ஒரு மாபெரும் வலியை உடலிலும் மனதிலும் தாங்கி, ‘அப்பா உன்ன சீக்கிரம் பார்க்க வந்துவிடுவேன்’ என்ற நம்பிக்கையை மட்டுமே அந்த பிள்ளைகளுக்கு அளித்து வாழும் வெளிநாட்டு அப்பாக்கள் ஒரு நாள் வீடு திரும்பும்போது, ‘நீங்கள் தான் என் அப்பாவா?’ என்று அந்த குழந்தை கேட்கும் வார்த்தையை கேட்டு அனுபவிக்கும் அப்பாக்கள் அனைவருக்கும் அது சாபமே!.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts