TamilSaaga

“நாகேந்திரனை காப்பாத்துங்க; கெஞ்சிக் கேட்கிறேன்” – சிங்கப்பூர் அரசிடம் சகோதரி உருக்கம்

சிங்கப்பூரில் மலேசிய தமிழர் நாகேந்திரனுக்கு போதைப்பொருள் வழக்கில் கடந்த நவம்பர் 10ஆம் தேதியன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. பல்வேறு தரப்பினரும் அவருக்கு கருணை காட்டுமாறு சிங்கப்பூர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப், தனிப்பட்ட முறையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு கடிதம் அனுப்பினார். அதில், நாகேந்திரனுக்குக் கருணை காட்டுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இதனை சிங்கப்பூர் பிரதமர் ஏற்க மறுத்துவிட்டார்.

இதையும் படியுங்கள் : “இந்திய வம்சாவளியை சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம்”

இதையடுத்து, தர்மலிங்கத்துக்கு நவம்பர் 10ம் தேதி நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட தூக்கு தண்டனை, கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள நாகேந்திரனை காப்பாற்றுங்கள் என அவரது சகோதரி சிங்கப்பூர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மலேசியாவில் வசிக்கும் நாகேந்திரன் சகோதரி சர்மிளா தர்மலிங்கம் அளித்த பேட்டியில், “எனது சகோதரர் நாகேந்திரன் அறிவுத் திறன் குறைந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் உண்மையில் அன்பானவர். அவர் நிச்சயம் சுயநினைவுடன் போதை மருந்தை கடத்தியிருக்க வாய்ப்பில்லை. சிங்கப்பூர் அரசு அவருக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

என் சகோதரன் நாகேந்திரனை சிங்கப்பூர் அரசு காப்பாற்றி விடும் என உறுதியாக நம்புகிறோம். குடும்பத்தினர் அனைவரும் அவர் உயிர் பிழைத்து மீண்டு வர வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகிறோம். நான் அதிசயம் நடக்கும் என திண்ணமாக நம்புகிறேன். அந்த கடவுள் கருணையால் சகோதரர் நாகேந்திரன் மரண தண்டனையில் இருந்து விடுதலை பெரும் அதிசயம் நிகழ காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related posts