சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர், தனது பட்டமளிப்பு விழாவின் போது சிங்கப்பூரில் விதிக்கப்படும் மரண தண்டனைக்கு எதிரான செய்தியுடன் கூடிய ஒரு காகிதத்தை அவர் பட்டத்தை வாங்கும்போது காட்சிப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மாணவர் குறித்து கிடைத்த புகாரை அடுத்து சிங்கப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மாணவர் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய போலீசார், யார் அந்த புகாரை அளித்தார்கள் அல்லது எப்போது புகார் செய்யப்பட்டது என்பது குறித்து குறிப்பிடவில்லை.
25 வயதான லூக் லெவி என்ற அந்த மாணவர் தனது பட்டமளிப்பு விழா அன்று எடுத்த புகைப்படங்களை குறித்து தனது ட்விட்டரில் பல ட்வீட்களை ஜூலை 11 அன்று வெளியிட்டுள்ளார். அவர் தனது பட்டமளிப்பு கவுன் பாக்கெட்டில் அந்த காகிதத்தை கொண்டுவந்ததாகவும்.
சான்றிதழை வாங்கும்போது அந்த காகிதத்தை கேமராக்கள் முன் காட்டியதாகவும், பின்னர் அந்த காகிதத்துடன் அங்கிருந்து நகர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். லெவி புவியியல் பாடத்தில் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த NUS பட்டதாரி தனது ட்வீட்களில் NUS யூடியூப் சேனல் அந்த பட்டமளிப்பு விழாவின் வீடியோவில் தனது காட்சிகளை காட்டவில்லை என்று கூறியுள்ளார். பட்டமளிப்பு நிகழ்வின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் கூட தணிக்கை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தற்போது அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவருகின்றது, இது சட்டத்திற்கு புறம்பானது என்றபோது தீவிர விசாரணைக்கு பிறகே முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.