உலக அளவில் பெருந்தொற்று பரவல் காரணமாக உள்ளூர் மற்றும் பன்னாட்டு போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உலகின் பல நாடுகளில் இன்னும் முழுமையாக விமான சேவைகளை வழங்க தயாராக இல்லை. அதேபோல சிங்கப்பூர் அரசும் கடந்த ஓர் ஆண்டிற்கு மேலாக பல நாடுகளுக்கு தங்களுடைய எல்லைகளை மூடி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அண்டை நாடான இந்தியாவில் பெருந்தொற்று பரவல் சற்று அதிகமாக காணப்படும் நிலையில் சிங்கப்பூர், இந்தியாவிற்கு இன்னும் தனது எல்லைகளை திறக்கவில்லை.
இந்நிலையில் தற்போது சிங்கப்பூரில் நிலைமை சீரடைந்து வருவதால் அடுத்த செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து VTL எனப்படும் Vaccinated Travel Lane திட்டம் மூலம் ஜெர்மனி மற்றும் புருனே ஆகிய நாடுகளில் இருந்து மக்களை வரவேற்க சிங்கப்பூர் தயாராகி வருகின்றது. இந்த திட்டம் வெற்றிபெற்றால் பிற நாடுகளில் இருந்து குறிப்பாக இந்தியாவில் இருந்து மக்கள் (தனிமைப்படுத்துதல் இன்றி )சென்று வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.
அதேபோல அவ்வப்போது சில இந்திய தொழிலாளிகள் மிகுந்த பாதுகாப்போடும், உரிய அனுமதியோடும் சிங்கப்பூர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரவிருக்கும் 20 நாட்களுக்கு சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்வதற்கான வந்தே பாரத்தின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்து விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமது Tamil Saaga Singapore செய்தி நிறுவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
மேலும் சிறப்பு விமானங்களாக இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டபோதிலும் அதிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த இருபது நாட்களுக்கு சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு விமான சேவையில் டிக்கெட் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூர் முதல் தமிழகம் வரை செல்லும் பயணிகள் விமானங்கள் இல்லாமல் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவார்கள். குறிப்பாக அவசர தேவை உள்ளவர்கள் பயணிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும்.
இந்த இக்கட்டான சூழலில் சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லவிரும்பும் பல பயணிகளின் முக்கிய கோரிக்கையாக இருப்பது என்னவென்றால் “கூடுதல் விமானங்கள்” என்பது தான். குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்படும் நிலையில் கூடுதலாக சில விமானங்களை இடையிடையே இயக்கினால் பலரும் உரிய நேரத்தில் தமிழகம் சென்றடையமுடியும் என்று கருதுகின்றனர். மேலும் இந்தியாவில் உள்ள விமானத்துறை அதிகாரிகளும் இங்கு சிங்கப்பூரில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தலையிட்டு சிறப்பு விமானங்கள் இயங்க அனுமதிக்குமாறு பலர் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.