TamilSaaga

இதுவரை யாரும் முன்னெடுக்காத முயற்சி… வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு புதுசலுகைகளை அறிவித்த தமிழக முதல்வர்!

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், பணி புரியும் இடங்களில் எதிர்பாராத விதமாக விபத்துகளில் உயிரிழக்கும் பொழுது அவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு உதவி திட்டத்தினை அறிவித்துள்ளது. இதன்படி, வெளிநாடுகளில் வாழும் தந்தை இறந்துவிட்டால் தமிழ்நாட்டில் வாழும் அவரின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையாக 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், திருமண உதவித் தொகையாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் குறைந்த வருவாயில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இந்த உதவித்தொகை பொருந்தும் எனவும், திடீரென்று ஏற்பட்ட இழப்பை சரிகட்ட இந்த வருமானம் ஓரளவுக்கு உதவியாக இருக்கும் என்று கருதி வழங்கப்படுகின்றது. மேலும் இந்த உதவி தொகையினை பெறுவதற்கு அயலக தமிழர் நல வாரியத்தில் வெளிநாட்டில் பணிபுரிபவர்கள்முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியமாகும். மேலும் திருமண உதவித் தொகையினை பெறுவதற்கு மணமகனுக்கு குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும் எனவும், மணமகளுக்கு குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மேற்கொண்டு அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐடிஐ போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் பொழுது உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தில் இருவருக்கு மட்டுமே உதவி தொகை வழங்கப்படும் எனவும் அதற்கு மேல் வழங்கப்படாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் மக்கள் என்றாலே அதிகம் சம்பளம் வாங்குவது ஒன்று என்ற கூற்றுக்கு மத்தியில், அவர்களிலும் சிரமப்படும் குடும்பம் இருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தினை அறிவித்துள்ள முதலமைச்சர் அவர்களுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் நன்றியினை தெரிவித்துள்ளனர்.

Related posts