சிங்கப்பூர்: சிங்கப்பூரின் போக்குவரத்துத் துறையில் (Singapore Transport ) உள்ள எஸ்பிஎஸ் டிரான்ஸிட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், பிஎஸ்ஏ உள்ளிட்ட 19 முக்கிய நிறுவனங்கள் புதிய சட்டத்தின் கீழ் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளவுள்ளன.
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள போக்குவரத்துத் துறை (முக்கிய நிறுவனங்கள்) சட்டம், நிலம், நீர் மற்றும் ஆகாயப் போக்குவரத்துத் துறைகளில் அரசாங்கத்திற்கு கூடுதல் அதிகாரத்தை வழங்குகிறது. இதன் மூலம், பல்வேறு பாதிப்புகள் மற்றும் இடையூறுகளில் இருந்து முக்கியமான போக்குவரத்துச் சேவைகள் பாதுகாக்கப்படும்.
சட்டத்திற்கு உட்படும் போக்குவரத்து நிறுவனங்களின் பட்டியல் ஏப்ரல் 1ஆம் தேதி அரசாங்க அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த நிறுவனங்கள் நேரடியான முக்கிய போக்குவரத்துச் சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் முக்கிய போக்குவரத்து சேவைகள் தொடர்பான முடிவுகள் மீது கட்டுப்பாடு மற்றும் தாக்கம் கொண்ட நிறுவனங்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் பிரிவில் பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டி மற்றும் பிஎஸ்ஏ இன்டர்நேஷனல் ஆகியவை அடங்கும்.
சிங்கப்பூரில் நேரடியான முக்கியப் போக்குவரத்துச் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஐந்து நிலப் போக்குவரத்து நிறுவனங்கள் அடங்கும். அவற்றில் எஸ்பிஎஸ் ட்ரான்சிட், எஸ்எம்ஆர்டி பேருந்துகள் மற்றும் எஸ்எம்ஆர்டி ரயில்கள் முக்கியமானவை.
விமானப் போக்குவரத்துத் துறையில் 9 நிறுவனங்கள் நேரடி சேவை வழங்கும் நிறுவனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சாங்கி விமான நிலையம் குழுமம் (சிங்கப்பூர்), சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட், சேட்ஸ் சேவைகள் மற்றும் எஸ்ஐஏ பொறியியல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இந்த புதிய போக்குவரத்துத் துறை (முக்கிய நிறுவனங்கள்) சட்டம் மூலம், சிங்கப்பூர் சிவில் விமானத்துறை ஆணையம், நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் கடல்துறை, துறைமுக ஆணையம் ஆகியவை பட்டியலில் உள்ள நிறுவனங்கள் மீது கூடுதல் அதிகாரத்தைக் கொண்டிருக்கும். இதன் மூலம் இந்த முக்கிய நிறுவனங்களின் செயல்பாடுகள் மேலும் கண்காணிக்கப்படும் மற்றும் தேசிய நலன் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.