சிங்கப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 24) மத்திய விரைவுச்சாலையில் (சிடிஇ) ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவரும் அவரது 14 வயது பிலியன் ரைடரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பிற்பகல் 1 மணியளவில் பிராடெல் சாலைக்கு முன்பாக அயர் ராஜா விரைவுச்சாலையை (AYE) நோக்கி CTE இல் விபத்துக்குள்ளானதால் அவசர சேவைகள் வரவழைக்கப்படடன.
இந்த விபத்தில் மூன்று கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சிக்கியது. 42 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் 14 வயது சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக SPF தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) “ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், மற்றவர் கண்டாங் கெர்பாவ் மருத்துவமனைக்கு (KKH) கொண்டு செல்லப்பட்டார்” என தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பான போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டது.
விபத்தின் காணொளி காட்சிகள், சிவப்பு நிற காரில் நொறுங்கிய பொன்னெட்டையும், சாலையில் சிதறிய குப்பைகளையும் காட்டுகிறது. விபத்து நடந்த இடத்தில் ஒரு போலீஸ் கார், ஒரு SCDF ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு இழுவை டிரக் ஆகியவை காணப்பட்டன என குறிப்பிட்டுள்ளது.