TamilSaaga

“குடும்ப வன்முறையிலிருந்து புலம்பெயர்ந்த பெண்களை பாதுகாக்க முயற்சி” – சிங்கப்பூர் பெண்கள் அமைப்புகள் பரிந்துரை

சிங்கப்பூரர்களை திருமணம் செய்து குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான உதவிகளை, விழிப்புணர்வை அதிகப்படுத்துவது குறித்து சிங்கப்பூரின் குடும்ப வன்முறை பணிக்குழு பல்வேறு பரிந்துரைகளை முன்மொழிந்து உள்ளது.

குழந்தைகளோடு இருக்கின்ற புலம்பெயர் வாழ்க்கைத் துணைவர்களுக்கு நீண்டகால குடிநுழைவு வருகை அனுமதியை ( Long Term Visiting Pass ) நீட்டிப்பது, குறிப்பாக விவாகரத்து வழக்குகள் நடைபெறும் பொழுது நீதிமன்ற நடவடிக்கைகள் முடிகின்ற வரையில் அவர்களின் அனுமதியை நீட்டிப்பது-

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது-

குற்றவாளிகள் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுப்பது –

குடும்ப அமைப்பை பாதுகாப்பது போன்றவை சார்ந்த பல்வேறு முன்மொழிவு களும் அந்த அறிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் சிங்கப்பூர் தலைவரும், குடும்ப வன்முறை பணிக்குழுவின் உறுப்பினருமான ஜார்ஜெட் டான் அவர்கள் குறிப்பிடும் பொழுது, இந்த பரிந்துரைகள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடைய பின்னணி, அவர்களது குடியேற்ற நிலை, ஆகியவற்றை பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பரிந்துரைகள் பயிற்சி பெற்ற நிபுணர்கள் மற்றும் உதவியாளர்களுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தர ஒரு முழுமையான அமைப்பினை உருவாக்கி தர உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த பரிந்துரைகளுக்கு பதில் கொடுத்துள்ள ‘சிங்கப்பூரின் செயல்பாடு மற்றும் ஆராய்ச்சிக்கான பெண்கள் அமைப்பு ‘ ( The Association Of Women For Action And Research – AWARE ) இந்த பரிந்துரைகள் புலம்பெயர்ந்த பெண்களுக்கு தேவையான உதவிகளை பெறுவதற்கு போதுமானதாக இல்லை என்றும், அவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள் இன்னும் அதிகமாகத்தான் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது 2016 – 18 ஆண்டு இடைவெளியில் புலம்பெயர்ந்த பெண்களிடமிருந்து உதவிகள் கேட்டு தங்கள் அமைப்பிற்கு வந்த அழைப்புகள் மற்றும் தங்கள் அமைப்பை நாடிய பெண்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்திருந்தது என்பதையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

சிங்கப்பூரர்களை திருமணம் செய்து கொண்ட பல்வேறு புலம்பெயர் பெண்களுக்கு, தங்கள் அனுமதி இல்லாமல் தங்கள் வாழ்க்கை துணைவர் தங்களுடைய குடிநுழைவு வருகை அனுமதியை ரத்து செய்ய முடியாது என்கிற அடிப்படை விழிப்புணர்வு கூட இல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. அந்த ஒரு காரணத்தைக் கொண்டே பல்வேறு பெண்கள் மிரட்டபடுவதும், தாங்கள் சந்திக்கிற குடும்ப வன்முறை குறித்து புகார் அளிக்க முடியாமல் அமைதியாக பொறுத்துப் போவதும், உளவியல் ரீதியான பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதும் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற புலம்பெயர்ந்த பெண்கள் தங்களுக்கு தேவையான எல்லா விபரங்களையும் பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு மொழிகளிலும் உதவக்கூடிய ‘தகவல் பன்மொழி இணைய முகப்பு ‘ உருவாக்கப்பட வேண்டும்.

குழந்தை இருப்பவர்கள் மட்டுமல்லாமல், குழந்தை இல்லாத புலம்பெயர் பெண்கள் மற்றும் வாழ்க்கைத் துணைவர்களுக்கும் அவர்களது வருகை அனுமதி நீட்டிக்கப்பட வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தேவையான சட்ட உதவியை பெறுவதற்கு சட்ட உதவி பணியகம் வழியாக இலவச உதவிகள் வழங்கப்பட வேண்டும். போன்ற குறிப்பிடப்படாத ஆனால் புலம்பெயர் பெண்களுக்கு தேவைப்படுகிற பல்வேறு உதவிகளை பற்றியும் AWARE அமைப்பானது சுட்டிக்காட்டி உள்ளது.

இது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த குடிவரவு மற்றும் சோதனை ஆணையம் ( ICA ) தங்களது கணவர், வாழ்க்கை துணைவரால் வருகை அனுமதி புதுப்பிக்கப் படவில்லை என்றாலும், 21 வயது நிரம்பிய வேறு எந்த சிங்கப்பூரராலும் வருகை அனுமதி நீட்டிக்கப்படும் வாயுப்பு இப்போது உள்ளது.மேலும் வழக்குகள் நடைபெறும்போது இயல்பாகவே அந்த அனுமதி நீட்டிப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்படும். பல்வேறு சமூக அமைப்புகளுடன் சேர்ந்து புலம்பெயர் வாழ்க்கைத்துணைவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளையும், உதவிகளையும், செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

Related posts