TamilSaaga

அதிக அளவில் வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதிக்கப்படலாம் – தடுப்பூசியின் பலனை விவரிக்கும் அமைச்சர்.

சிங்கப்பூரில் தற்போது தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. இந்நிலையில் அதிக அளவில் தடுப்பூசிகள் போடப்படும் நிலையில் பிற நாட்டு ஊழியர்கள் மற்றும் பணிப்பெண்களை மீண்டும் சிங்கப்பூருக்குள் அனுமதிக்க அது வழிவகுக்கும் என்று அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சரான கான் கிம் யோங் பிற அமைச்சர்களுடன் நடந்த ஆலோசனையில் இதனை கூறினார். மேலும் ஆட்கள் பற்றாக்குறையால் அவதிப்படும் நிறுவனங்களுக்கு இது பெரிய பலனை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் நிறுத்தப்பட்டுள்ள பணிகள் தொடங்கவும் தடுப்பூசி அதிகரிப்பு பயன்படும் என்று அமைச்சர் கூறினார். வெளிநாட்டு பணியாளர்கள் பலர் சிங்கப்பூர் திரும்ப முடியாமல் உலகின் பல நாடுகளில் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி சிங்கப்பூர் தேசிய தினத்திற்குள் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்ற நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்திற்குள் சிங்கப்பூர் மக்கள் தொகையில் பாதி பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் அளிக்கப்படும் என்று அவர் வெளியிட்டிருந்த முகநூல் பதிவை அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரில் தற்போது மின்னல் வேகத்தில் தடுப்பூசி வழங்கும் பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது 12 வயது முதல் 39 வயது வரை உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருவது நினைவுகூரத்தக்கது.

Related posts