சிங்கப்பூர் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இந்த தீபாவளி திருநாளில் சிங்கப்பூரில் பணி செய்து வரும் அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் தனது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட காணொளியில் அவர் கூறியவை பின்வருமாறு..
“அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள், தீபத் திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளி, இருளுக்கு பதிலாக ஒளி, தீமைக்கு பதிலாக நன்மையின் வெற்றியைக் கொண்டாடுகிறது. இவ்வாண்டு இந்து கோவில்களில் மற்றும் துவாஸ் சவுத் பொழுதுபோக்கு நிலையத்தில் நேரடியாக பிரார்த்தனைகளில் நமது இந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்”.
அமைச்சர் வெளியிட்ட வாழ்த்து செய்தி
“மேலும் பிரார்த்தனைகளை இணையவழியில் நேரலையில் ஒளிபரப்பு செய்கின்றோம். அரசாங்க சார்பற்ற தொண்டு அமைப்புகள் மற்றும் சமூக பங்காளிகளின் ஆதரவுடன் நாங்கள் பொழுதுபோக்கு நிலையங்களில் கொண்டாட்டங்களை நடத்தி வருகிறோம். குடிபெயர்ந்த நமது ஊழியர்களுக்கு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறோம். இந்த முயற்சிகள் நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று நம்புகிறேன்”.
“இந்த பண்டிகையை கொண்டாடும் அதே வேளையில் நாம் ஒன்றிணைந்து இந்த பெரும் தொற்றுக்கு எதிரான நமது போரில் அடைந்த முன்னேற்றத்தையும் நாம் நிச்சயம் நினைவு கூறவேண்டும். தடுப்பூசி தவிர நாங்கள் உறுதியுடன் செயலாற்றி நமது சிங்கப்பூர் தங்கும் விடுதிகளில் மீண்டு வரும் ஆற்றலை வலுப்படுத்தி நமது புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எளிதில் முதன்மை பராமரிப்பு கிடைப்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்”.
“இதுவரை நாம் அடைந்த அனைத்து முன்னேற்றங்கள் காரணமாக நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக எங்களால் தளர்த்த முடியும். மேலும் செப்டம்பரில் நாங்கள் ஒரு முன்னோடி திட்டத்தையும் தொடங்கினோம் அதன்படி தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்கள் சமூக வருகைக்கு அழைத்துவரப்பட்டனர். நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் இருந்து நாங்கள் கருத்துக்களை பெற்று சமூக வருகை திட்டத்தை தற்போது விரிவுபடுத்தி உள்ளோம்”.
“இவை அனைத்தும் இயல்பு நிலைக்கு நாம் திரும்ப முக்கிய படிகளாக விளங்கி வருகிறது. நமது வெற்றியை கொண்டாடும் அதே வேளையில் இதுவரை நாம் எடுத்த முயற்சிகள் மற்றும் செய்த தியாகங்கள் வீண் போகாமல் இருக்க நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். நம் குடும்பத்தாரும் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க தீபாவளி நமக்கு புது வலிமையை அளிக்கும் என்று நம்புகிறோம் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்று கூறினார்.