ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரர்களும் ஆசிய ஆப்ரிக்க கண்டங்களில், தங்களது நேரடியான லண்டன் ஆட்சியின் கீழும், பாரிஸ் ஆட்சியின் கீழும், காலனி பகுதிகளை வைத்திருந்தனர். வேறு பகுதிகளில் பணப் பயிர்களான காப்பி, தேயிலை, கரும்பு, ரப்பர், ஆகியவற்றை பயிர் செய்திருந்தனர். தங்களது தோட்டங்களிலும், பண்ணைகளிலும், வயல்களிலும், சுரங்கங்களிலும் வேலை செய்ய ஆயிரக்கணக்கான ஆட்கள் தேவைப்பட்டனர். இதற்கு வசதியாக தான் ‘தடையற்ற குடிப்பெயர்வு’ என்று சொல்லப்படுகிற Free Migration ஐ நடைமுறையில் வைத்திருந்தனர். பர்மா, இலங்கை ஆகியவையும் இந்திய ஆட்சியின் கீழ் இருந்ததால் இந்த தடையற்ற குடிபெயர்வு அமைப்பு தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து காலனி நாடுகளுக்கு தமிழர்கள் பாஸ்போர்ட், விசா ஏதுமின்றி பயணம் செய்வதை எளிதாக்கியது.
தரகர் அல்லது கண்காணியர் என்று சொல்லப்படுகிறவர்களின் வழியாக, கூலியாட்கள் பிடிக்கப்படுவர். பிடிக்கப்பட்ட ஒவ்வொருவர் கழுத்திலும் அடையாளத் தகடு ஒன்று கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். அந்த தகட்டில் கூலியாளின் வரிசை எண் (பெயர் கூட கிடையாது) வேலை செய்ய வேண்டிய இடம், ஆகியவை குறிக்கப்பட்டிருக்கும். கப்பலில் இருந்து உரிய துறைமுகத்தில் இறங்கியவுடன், கழுத்தில் கட்டப்பட்டிருந்த அந்த அடையாள தட்டுக்கு ஏற்ப உரிய இடத்திற்கு அவர்கள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
கூலி ஆட்களின் சம்பளம் மிகக் குறைவு.ஒப்பந்தக் கூலிகளாக அவர்கள் பிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து, கொண்டு செல்லப்பட்ட இடம் வரையிலான கப்பல் பயண கட்டணம் முதலியவற்றை கூட அந்த கூலித் தொழிலாளியின் கணக்கில் கடனாக வைத்துக்கொண்டு பின்னர் அதை வசூலித்து இருக்கிறார்கள்.
முதலில் இங்கிருந்து கூலிகளாக செல்கிறவர்கள், தோட்ட முதலாளியிடம் இருபத்தி நான்கு மாதங்கள் அதாவது 730 நாட்கள் வேலை செய்ய வேண்டும். காலை 6 மணி தொடங்கி மாலை 6 மணி வரை வேலை.உணவு இடைவேளை 12 மணியிலிருந்து 1 மணி வரை. ஒரு நாள் கூலி 12 சென்ட் . 15 நாட்களுக்கு ஒரு முறைதான் ஊதியம் வழங்கப்படும். தோட்டத்திலேயே ஓலைகளால் ஆன குடிசைகளில் தான் இவர்கள் தங்கவேண்டும். பனிக்காலம் , மழைக்காலம், வெயில்காலம் எல்லாம் அந்த குடிசைகள் தான் இவர்களுக்கு தங்கும் இடங்கள்.
ஆண்டுக்கு ஆண்டு கூலி உயரவில்லை ஆனால் கூலிகளின் எண்ணிக்கை கூடியது .அப்படி புலம்பெயர்ந்து போய் கூலிகளாக வேலை செய்யும் இடங்களில் இவர்கள் நோயுற்றாலோ, ஏதாவது விபத்துக்களினால் ஊனமுற்றாலோ, தோட்ட முதலாளிகள் அவர்களை விரட்டி விடுவார்கள். அவ்வாறு வெளியில் துரத்தப்பட்டவர்கள் நாடு திரும்பவும் வழி இன்றி, வேலை செய்யவும் வாய்ப்பின்றி, பிச்சைக்காரர்களாக மாறி தெருக்களில் பிச்சை எடுத்து இருக்கிறார்கள். 1910இல் தான் இந்த ஒப்பந்தக் கூலி முறை ஒழிக்கப்பட்டு மாதச்சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூர் , மலேயாவில் ஒரு ஆணுக்கு மாத சம்பளமாக ரூபாய் 17-ம், ஒரு பெண்ணுக்கு மாத சம்பளமாக ரூபாய் 14-ம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது கூட கிடைக்காமல் தமிழர்கள் புலம் பெயர்ந்து போய் இருக்கிறார்கள் என்றால், உள்நாட்டில் அவர்கள் சந்தித்த வறுமையும்,வாய்ப்பின்மையும் எவ்வளவு கொடியதாக இருந்திருக்கும்.
புதுச்சேரியில் இருந்து கப்பல் கப்பலாக பிரெஞ்சு குடியேற்ற நாடுகளுக்கு தமிழ் கூலிகள் அனுப்பப்பட்டனர். இப்படி கூலிகளை அனுப்புவதில் ஏகப்பட்ட குளறுபடிகளும், திருட்டு தனங்களும் நடந்திருக்கின்றன. ஆட்களை பிடிப்பதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட முகவர்கள், பல்வேறு பொய்களைச் சொல்லி புதுச்சேரிக்கு கள்ளத்தனமாக அவர்களை அழைத்து வந்துவிடுவார்கள். அங்குள்ள முகாம்களில் அவர்களை அடைத்து வைத்துக் கொண்டு, அவர்களின் பெயர்களையும், முகவரியை மாற்றி விடுவார்கள். கப்பல் வந்தவுடன் கப்பலில் ஏற்றி அவர்களை அனுப்பி விடுவர். பிள்ளைகளை, கணவனை, உடன்பிறப்பை காணோம் என தேடி வரும் உறவினர்களிடம் கப்பலில் சென்றவர்களின் பெயர்ப் பட்டியலைக் காட்டி பார்த்துக் கொள்ளச் சொல்வார்கள். அவர்களும் தேடிப் பார்ப்பார்கள்.ஏற்கனவே பெயர்,முகவரி எல்லாம் மாற்றப்பட்டு விட்டதால் அவர்களால் கண்டுபிடிக்க முடியாது . மொரிஷியஸ், ரீயூனியன் முதலான பிரெஞ்சு காலனி நாடுகளில் இப்படித்தான் தமிழ் ஆட்கள் கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூலிகள் அனைவருக்கும் கல்வி அறிவு இல்லை என்பதால், ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்றே தெரியாமல், ஏதோ வேலை கிடைத்தால் போதும் என கைநாட்டு வைத்துவிட்டு அவர்கள் சென்றது இவர்களுக்கு இன்னும் வசதியாகப் போயிற்று.
குடியேறிய நாடுகளில் சூரிய உதயம் முதல் மறையும் வரை கூலிகள் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு உணவாக வெறும் 750 கிராம் சோறு, 100 கிராம் காய்கறி அல்லது கருவாடு வழங்கப்பட்டது. இந்த கருவாடும் கூட கெட்டுப்போன தாகவே இருக்கும். நீக்ரோ அடிமைகளும் தமிழ் கூலிகளும் நடத்தப்பட்ட விதத்தில் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை. இந்த தமிழ்க் கூலிகளை பிடிப்பதற்காக தரகர்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல, பொய்களைச் சொல்லி அழைத்து வந்து பெயர்கள் முகவரிகள் மாற்றி அனுப்பி வைப்பது மட்டும் அல்லாமல் இன்னும் பல்வேறு இழிந்து முறைகளிலும் அவர்களை நாடு கடத்தி இருக்கின்றனர். குறிப்பாக அதிக மதுவினை கொடுப்பது, விலைமாது கொண்டு அவர்களை இணங்கச் செய்து கைநாட்டு பெறுவது, பகட்டான துணிகளை பரிசளிப்பது, அவர்களது உள்நாட்டு கடன்களை அடைக்க முன்பணம் வழங்குவது, இப்படி பல்வேறு விதமான முறைகளில் தமிழ் கூலிகளை ஈர்த்து, ஏமாற்றி, வெளிநாடுகளுக்கு கப்பல்களில் ஏற்றி ஒப்பந்த கூலிகளாக அனுப்பியிருக்கிறார்கள்.
பிழைப்புத் தேடிய ஒரே காரணத்திற்காக இப்படி ஏமாற்றப்பட்டு, இயற்கையாலும், அரசாலும், வஞ்சிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட தமிழர்கள், தாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் தங்களது தனிச்சிறப்பான கடின உழைப்பைக் கொண்டு அந்தந்த நாடுகளை கட்டி எழுப்பி இருக்கிறார்கள் என்னும் உண்மையை வரலாறு எந்த காலத்திலும் மறைக்க முடியாது.
இந்த இடத்தில் சிங்கப்பூர் குறித்த ஒரு செய்தியையும் பதிவு செய்வது தேவை என கருதுகிறேன். 1867 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் இந்திய ஆட்சியின் கீழ் வங்க மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அக்காலத்தில் தென்னிந்தியாவில் குற்றம் புரிந்து, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் பினாங்கு , சிங்கப்பூர் , மலாக்கா ஆகிய இடங்களில் சிறை வைக்கப்பட்டு இருந்தனர் 1857இல் சிங்கப்பூரில் மட்டும் 2319 பேர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவர்களைப் போன்ற சிறைக்கைதிகளை வைத்துக்கொண்டுதான், சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டன, கட்டடங்கள் கட்டப்பட்டன, பல்வேறு உருவாக்க பணிகளும் மேற்கொள்ளப்பட்டு அந்த நாடுகள் எழில் பெற்றன.
அண்டை நாடுகளை உயர்த்தியும் நம் தமிழர்களை தரம் குறித்தும் பேசும் முன் இனி ஒருமுறை இந்த வரலாற்று பின்னணிகளை நினைத்துக் கொள்வோம். நம் பார்வை மாறுபடும்.
என்றும் அன்புடன்
உங்கள்
ஆரா அருணா.