சிங்கப்பூரில் புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து சந்திப்பில் சாலையைக் கடக்கவிருந்த பாதசாரிகள் மீது ஒரு கறுப்பு மசராட்டி கார் மோதியதில் ஒரு சைக்கிள் ஓட்டி உள்பட மூன்று பேர் காயமடைந்தனர். உடனடியாக பாதிக்கப்பட்ட மூவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) சனிக்கிழமை (ஜனவரி 1) இரவு 9.35 மணிக்கு கிரேஞ்ச் சாலை மற்றும் ஆர்ச்சர்ட் சாலை சந்திப்பில் சாலை விபத்து ஏற்பட்டது குறித்து எச்சரிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் Dormitoryயில் நடந்த சண்டை : ஒரு தமிழர் பலி – ஒரு தமிழர் கைது
22 வயதான மாணவர் யாங் யுக்சுவான், சாலையை தான் கடந்து சென்றபோது 20 வயதிற்குட்பட்ட ஒரு பெண் சாலையின் நடுவில் கிடப்பதை கண்டேன் என்று Lianhe Zaobao செய்தி நிறுவனம் தெரிவித்தது. SCDF பணியாளர்கள் வந்து அந்த பெண்ணை ஒரு ஸ்ட்ரெச்சர் மூலம் ஆம்புலன்சில் ஏற்றிச் செல்லும் வரை அந்த பெண் அசையாமல் கிடந்தார் என்றார் அவர். அந்த மஸராட்டியை ஓட்டி வந்த நபருக்கு 30 வயது இருக்கும் என்றும், அவருடன் ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் இருந்ததாகவும் யாங் கூறினார்.
விபத்து நடந்த சாலையில் உள்ள இரண்டு வழித்தடங்களும் சுமார் அரை மணி நேரம் மூடப்பட்டன. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகின்றது. காயமடைந்த அந்த இரண்டு பாதசாரிகள் மற்றும் ஒரு சைக்கிள் ஓட்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை குறித்து தற்போதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.