கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற பலர் தற்போது அதிகளவில் திருப்பி அனுப்பப்பட்டு வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பெருந்தொற்று இரண்டாம் அலையில் உலகின் பல நாடுகள் பெரியளவில் பாதிக்கப்பட்டன. சிங்கப்பூரும் அதில் இருந்து தப்பவில்லை. எனினும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விமான போக்குவரத்தில் சில விலக்குகள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, அப்போது VTL மூலம், ஏகப்பட்ட ஊழியர்களை சிங்கப்பூரில் உள்ள பல நிறுவனங்கள் வேலைக்கு எடுத்தன.
ஆனால், இப்போது யதார்த்தம் என்னவெனில், சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றன. அதிகளவில் நவம்பர் மாதம் ஆட்களை தேர்வு செய்ததாலோ என்னவோ, இப்போது ஊதியம் கொடுக்க முடியாமல் சில நிறுவனங்கள் தடுமாறுகின்றன.
இதனால், ஊழியர்கள் விடுமுறை கேட்டால் சற்றும் தயங்காமல், அதிக அளவில் விடுமுறை கொடுத்து அவர்கள் ஊருக்கு திரும்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். இன்னமும் பல நிறுவனங்களால் இந்த சிக்கலில் இருந்து மீண்டு வர முடியவில்லை. சில இடங்களில் ஊழியர்கள் கட்டாயமாக விடுப்பு கொடுக்கப்பட்டு ஊருக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
பெருந்தொற்று காலம் ஏற்படுத்திய பாதிப்பு இன்னமும் நீங்கவில்லை என்பதை இந்த செய்திகள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. இதனால், இப்போது ஓரளவுக்கு சிங்கப்பூரில் நல்ல வேலையில், நல்ல சம்பளத்தில் பணிபுரிவோர் தங்கள் வேலையில் மிக கவனமுடன் இருப்பதும் அவசியமாகிறது.