SINGAPORE: என்னதான் இருந்தாலும் ஒரு மனிதனுக்கு இப்படியொரு சோதனை வந்திருக்கக் கூடாது. மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் 14,000 டாலர் பணத்தை தொலைத்துவிட்டு விழிபிதுங்கி நிற்கிறார் தனியார் நிறுவன கார் ஓட்டுநர் Zhuo.
ஆம்! Zhuo சிங்கப்பூரில் ஒரு தனியார் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் Block 116 Marsiling Rise-ல் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த செப்.30ம் தேதி Zhuo-ன் மனைவி வீட்டை சுத்தம் செய்வதற்காக, பழைய உடைகளை எல்லாம் அப்புறப்படுத்தி இருக்கிறார். அப்போது Zhuo-ன் பழைய சட்டை ஒன்றில் S$14,000 பணம் இருந்திருக்கிறது. அதை சரியாக கவனிக்காத மனைவி, பணத்துடன் சட்டையை குப்பைத்தொட்டியில் தூக்கி எறிந்துவிட்டார்.
அந்த சட்டையில் 14 S$1000 நோட்டுகள் என மொத்தம் 14,000 சிங்கப்பூர் டாலர் இருந்திருக்கிறது. சிங்கை அரசு, கடந்த ஆண்டே S$1000 நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்திவிட்ட போதிலும், அந்த நோட்டுகளை சேகரிப்பதை Zhuo வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
“எனது நண்பர்கள் யாரேனும் ஒரு ஆயிரம் டாலர் நோட்டை வைத்திருந்தால், நான் அவர்களுடன் பணத்தை மாற்றி அதனை வாங்கி வைத்துக் கொள்வேன்” என்று Zhuo இந்த சம்பவம் குறித்து அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஆயிரம் டாலர் நோட்டுகள் திருடு போய்விடுமோ என்று பயந்த Zhuo , அவற்றை பாதுகாப்பாக வைப்பதற்காக தனது சட்டைப் பையில் மறைத்து வைத்திருக்கிறார். இந்த ரகசியம் தெரியாத அவரது மனைவி, சட்டையுடன் சேர்த்து பணத்தையும் தூக்கி எறிய, இப்படியொரு சிக்கல் வருமென்று நான் நினைக்கவில்லை என்று புலம்பித் தள்ளியுள்ளார் Zhuo.
எனினும், இந்த சம்பவம் குறித்து Zhuo போலீசாரிடம் புகாரும் அளித்திருக்கிறார். அப்படி யாராவது தெரியாமல் பணத்தை எடுத்திருந்தால், திருப்பி கொடுத்துவிடுங்கள் என்று போலீசாரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.