TamilSaaga

“ஏன் இந்த கோவம்” : சிங்கப்பூரில் காவல்நிலைய சுவற்றில் “BIG BULLY” என்று பெயிண்ட் அடித்த நபர் – நீதிமன்றத்தில் ஆஜர்

சிங்கப்பூரில் நேற்று வியாழக்கிழமை யிஷுன் ரிங் சாலையில் உள்ள சோங் பாங் போலீஸ் போஸ்ட் நிலையத்தின் (NPP) சுவர்கள் மற்றும் கதவுகளில் கருப்பு வர்ணத்தை பூசியதாக சந்தேகிக்கப்பட்ட ஒருவர் மீது இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24) அன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அப்துல் ரஹீம் அபு பக்கர் என்ற அந்த 50 வயது நபர் “BIG BULLY” மற்றும் “ISD BIG Bull” என்ற வார்த்தைகளை மதியம் 1.46 மணியளவில் அந்த சுவர்களில் வரைந்ததாக கூறப்படுகிறது.

அந்த சிங்கப்பூரர் தற்போது மனநல நிறுவனத்தில் மனநல கண்காணிப்புக்காக ரிமாண்ட் செய்யப்படுவார் என்றும். அவரது வழக்கு வரும் அக்டோபர் மாதம் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வியாழக்கிழமை பிற்பகல் 1.55 மணிக்கு இந்த வழக்கு குறித்து அதிகாரிகள் தகவல் பெற்றதாக காவல்துறை வெளியிட்ட முந்தைய அறிக்கையில் கூறியது குறிப்பிடத்தக்கது. தொகுதி 141 இல் உள்ள அந்த NPP மறுவடிவமைக்கப்பட்ட காவல் நிலையங்களில் ஒன்றாகும். இது குடியிருப்பாளர்களுக்கு சுய-உதவி கியோஸ்க்குகள் வழியாக காவல் சேவைகளை 24 மணி நேரமும் வழங்கிவருகிறது.

இந்த நிகழ்வு குறித்து போலீசார் கூறியதாவது “அந்த நபர் நாசவேலையில் ஈடுபட்டதாகவும் மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகளை வைத்திருத்தல் போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளனர். “இதுபோன்ற கவனக்குறைவான செயல்களைச் செய்பவர்களை காவல்துறை உறுதியாகக் கையாள்கிறது, ஏனெனில் இதுபோன்ற செயல்கள் பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கும் மற்றும் தேவைப்படும் நபர்களுக்கு காவல்துறையின் சேவையை தாமதப்படுத்தலாம்” என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் எட்டு முறை பிரம்படியும் விதிக்கப்படும். ஆனால் அப்துல் ரஹீமின் வயது காரணமாக அவருக்கு பிரம்படி அளிக்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts