சிங்கப்பூரில் சுமார் 35,000 டாலர் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் சம்பந்தப்பட்ட ஆயுதக் கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை (செப்டம்பர் 3) கைது செய்யப்பட்டார். மலேசிய வேலை அனுமதி வைத்திருக்கும் 46 வயதான அந்த நபர் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் உட்லேண்ட்ஸ் ஸ்ட்ரீட் 31ல் உள்ள ஒரு அடகு கடைக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற அவர் அங்கிருந்த பெண் ஊழியரிடம் சீன மொழியில் கையால் எழுதப்பட்ட சீட்டு ஒன்றை காட்டியதாகக் கூறப்படுகிறது. அந்த சீட்டில் “கத்தாதே, எனக்கு பணம் மட்டுமே தேவை. என்னிடம் கத்தி இருக்கிறது, நான் மக்களை காயப்படுத்த விரும்பவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த நபர் கத்தியைப் பயன்படுத்தி வேறொரு ஊழியரை பயமுறுத்தியுள்ளார். அவர் அவரது அறிவுறுத்தல்களுக்கு இணங்கி அவருக்கு 24,400 வெள்ளி ரொக்கத்தைக் கொடுத்துள்ளார்.
மேலும் அவர் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு முன், 10,747 டாலர் மதிப்புள்ள ஒரு தங்கச் சங்கிலி மற்றும் ஒரு தங்க வளையலைப் பறித்துச்சென்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து செம்பவாங் சாலையில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் சம்பவம் நடந்த 16 மணி நேரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
ஒரு கத்தி, கையால் எழுதப்பட்ட சீட்டு, இரண்டு நகைகள், ஒரு சட்டை, ஒரு பேண்ட் மற்றும் ஒரு பையை போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றத்தை செய்த உடனேயே அந்த நபர் திருடப்பட்ட அந்த பணத்தின் ஒரு பகுதியை கொண்டு சூதாட்டம் செய்ததாக நம்பப்படுகிறது. மேலும் திருடப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை தனது கடன்களை திருப்பி செலுத்த பயன்படுத்தினார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் ஆயுதக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த மனிதனுக்கு ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும், மேலும் 12 பிரம்படி வரை கொடுக்கப்படலாம்.