சிங்கப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு தனது முதலாளியின் மாமியாரைக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வீட்டுப் பணிப்பெண்ணுக்கு, இன்று ஆகஸ்ட் 26ம் தேதி அன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் அவர் வழக்கை விசாரித்து ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை குறைத்து இப்பொது அவருக்கு 17 ஆண்டுகால தண்டனை வழங்கியுள்ளது. 70 வயதான அந்த மூதாட்டி, தன்னை வேலைக்கு அமர்த்திய முகவரிடமே தன்னை திருப்பி அனுப்புவதாக மிரட்டியதை அடுத்து, கடந்த ஜூன் 25, 2018 அன்று, 24 வயதான ஜின் மார் ந்வே, அந்த மூதாட்டியை 26 முறை குத்தி கொன்றுள்ளார்.
மியான்மரைச் சேர்ந்த அந்த பணிப்பெண்ணுக்கு கொலை நடந்தபோது 17 வயது, இருப்பினும் அவரது பாஸ்போர்ட்டில் சிங்கப்பூரில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்வதற்கான குறைந்தபட்ச வயதான 23 என்று தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது என்பது நினைவுகூரத்தக்கது. மேலும் அந்த பெண்ணின் மேல்முறையீட்டு விசாரணையில், கொலை நடந்த நேரத்தில் அவர் தூண்டிவிடப்பட்டதாக அவரது வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று ஆகஸ்ட் 26 அன்று அவருக்கு தண்டனை விதித்த நீதிமன்றம், இறந்த அந்த வயதான மூதாட்டியின் பேச்சு அந்த பணிப்பெண்ணின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால் அந்த பணிப்பெண்ணின் ஆத்திரம் அதிகமாகி அவர் இப்படி நடந்திருக்கிறார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், நீதிபதி டே யோங் குவாங் மற்றும் நீதிபதி சீ கீ ஊன் ஆகியோர் அடங்கிய நீதிமன்றம், இந்தத் தாக்குதல் கொடூரமானது என்றும் விவரித்தனர்.
இன்று கூடிய நீதிமன்ற அமர்வில், இறுதியாக தனது தண்டனையை குறைத்ததை அறிந்து, தனது இரு கரங்களை கூப்பி தலைகுனிந்து அந்த பணிப்பெண் நன்றி கூறியதாக நீதிமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.