சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தோபாயோ, தெம்பனிஸ் மற்றும் வாம்போ ஆகிய வட்டாரங்களில் வரும் ஜூன் மாதத்திற்குள் மூன்று புதிய பொதுப் பேருந்து சேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் போக்குவரத்து முனையங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் வணிக வளாகங்களை எளிதில் சென்றடைய முடியும்.
பொதுப் பேருந்துச் சேவைத் தொடர்புகளை வலுப்படுத்த கடந்த ஆண்டு ஜூலை மாதம் 900 மில்லியன் வெள்ளி மதிப்பிலான திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தான் இந்த புதிய பேருந்து சேவைகள் அறிமுகம் காண உள்ளன.
நிலப் போக்குவரத்து ஆணையம் (Land Transport Authority – LTA) திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, முதல் புதிய பேருந்து சேவையான 299, எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் சேவையைத் தொடங்கும். இது தெம்பனிஸ் நார்த் பேருந்து முனையத்தையும் தெம்பனிஸ் ஸ்திரீட் 96ஐயும் இணைக்கும். போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது போல, இந்த சேவை தெம்பனிஸ் சவுத் போன்ற புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக (HDB) குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இரண்டாவது புதிய பேருந்து சேவையான 21X, ஏப்ரல் 28ஆம் தேதி முதல் வாம்போவுக்கும் நொவீனாவுக்கும் இடையே இயக்கப்படும். இந்த சேவை வாம்போ வட்டாரவாசிகள் நொவீனா MRT நிலையத்தை விரைவாகச் சென்றடைய உதவும் என்று LTA தெரிவித்துள்ளது. ‘லூப் சர்விஸ்’ எனப்படும் இந்த பேருந்து, செயின்ட் மைக்கல்ஸ் பேருந்து முனையத்திலிருந்து புறப்பட்டு, குறிப்பிட்ட வழித்தடத்தில் சுற்றி வந்து மீண்டும் அதே இடத்தில் முடியும். தற்போதுள்ள பேருந்து சேவை எண் 21 உடன் இணைந்து 21X இயக்கப்படும். இது குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும் மற்றும் வார நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே சேவை வழங்கும். வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் இந்த சேவை இயங்காது. பேருந்து சேவைகள் 299 மற்றும் 21X ஆகிய இரண்டையும் SBS Transit நிறுவனம் இயக்கும்.
மூன்றாவது புதிய பேருந்து சேவையான 230M, கிம் கியட் அவென்யூவில் வசிப்பவர்களை தோபாயோ பேருந்து முனையம் மற்றும் MRT நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிறது. தோபாயோ வட்டாரத்தில் தற்போது இயங்கி வரும் சில பேருந்து சேவைகளின் வழித்தடங்களில் வரும் ஜூன் மாதத்திற்குள் மாற்றங்கள் செய்யப்படும் என்றும், அதே காலகட்டத்தில் 230M சேவை தொடங்கப்படும் என்றும் LTA தெரிவித்துள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது.
இந்த புதிய பேருந்து சேவைகள் சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும், பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.