சிங்கப்பூரின் நிதி அமைச்சராக 1985 முதல் 2001 வரை பணியாற்றிய ரிச்சர்ட் ஹூ சூ தாவ் என்பவர் மரணமடைந்தார். இவருக்கு 96 வயது ஆகிய நிலையில் வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார் என துணை பிரதமர் பேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ளார். இவர் நீண்ட காலமாக சிங்கப்பூரின் நிதி அமைச்சர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சிங்கப்பூரின் நாணய ஆணையம் உருவாக்கப்பட்ட பொழுது இவரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என அரசியல் தலைவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். மேலும் ஜி ஐ சி எனப்படும் சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டதிலும் இவரது சேவை இன்றியமையாததாகும். நிதி அமைச்சராக மட்டுமல்லாமல் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் இயக்குனர், சுகாதார அமைச்சர் மற்றும் தேசிய வளர்ச்சி அமைச்சர் என பல பதவிகளை இவர் வகுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை ஆன நாளை மண்டாய் தகன சாலையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் நீண்ட கால நிதியமைச்சர் ஆக இருந்த ரிச்சர்டின் பங்கு சிங்கப்பூர் அரசால் என்றென்றும் மறக்க முடியாதது என அவரது சேவைகளை நினைவு கூர்ந்து அவருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.